இந்தியா

கார்கில் போரின் 16-வது நினைவு தினம்: உயிர் நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி

பிடிஐ

கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 16-வது ஆண்டு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்தப் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் உள்ள ராணுவ மையங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

டெல்லியில் உள்ள போர் நினைவிடமான அமர் ஜவான் ஜோதியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், ராணுவ தலைமை தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக், விமானப்படை தலைமை தளபதி அருப் ராஹா, கடற்படை துணைத் தளபதி பி.முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள ராணுவ மையங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கார்கில் மாவட்டம் டிராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் தல்பீர் சிங் சுஹாக் நேற்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறும்போது, "மீண்டும் ஒரு கார்கில் போர் ஏற்பட அனுமதிக்க மாட்டோம்" என்றார்.

பிரதமர் மோடி புகழஞ்சலி

கார்கில் போரில் உயிர் நீத்த தியாகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் "தாய்நாட்டுக்காக தங்களது உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். கார்கில் போர் நினைவு தினம், நமது ராணுவ வீரர்களின் பலம் மற்றும் தியாகங்களை நமக்கு நினைவுப்படுத்துவதாக உள்ளது" என்று குறிப்பிட்டு உள்ளார்.

கார்கில் போரின் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி 'விஜய் திவஸ்' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து வானொலி உரையில் மோடி கூறும்போது, "கார்கில் போரில் நமது ராணுவ வீரர்கள் ஒவ்வொருவரும் 100 எதிரிகளை விட துணிச்சலாக போரிட்டனர்.

துணிச்சல்மிக்க அந்த வீரர்களுக்கு சல்யூட் செய்கிறேன். தங்கள் உயிரை பற்றி கவலைப்படாமல், எதிரிகளின் சதி திட்டத்தை முறியடித்த நமது வீரர்களின் துணிச்சல், தியாகம் மிகவும் போற்றுதலுக்கு உரியது. அதேநேரத்தில் எல்லையில் மட்டும் அந்த போர் நடக்கவில்லை. நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களும், நகர மக்களும் போரை வெற்றி கொள்ள பங்காற்றினர்" என்றார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கார்கில் மாவட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 1999-ம் ஆண்டு போர் மூண்டது. 2 மாதங்களுக்கு மேல் நடைபெற்ற இந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றது. எனினும், இந்தப் போரில் அதிகாரிகள், படைவீரர்கள், வீரர்கள் என 490 பேர் உயிர்த் தியாகம் செய்தனர்.

SCROLL FOR NEXT