இந்தியா

இந்து பயங்கரவாதம் சொல் தான் பயங்கரவாத ஒழிப்பை பலவீனப்படுத்தியது: மத்திய அரசு

பிடிஐ

'இந்து பயங்கரவாதம்' என்ற வார்த்தை உருவாகத்தினால்தான் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் பலவீனமடைந்தன என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

குருதாஸ்பூர் தாக்குதல் பற்றி மாநிலங்களவையில் நேற்று ராஜ்நாத் சிங் பேசியபோது எதிர்ப்புகள் கிளம்பி, அவை முடக்கத்துக்கு இட்டுச் செல்லப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் இந்த அணுகுமுறை விமர்சிக்கும் விதமாக, மக்களவையில் இன்று பஞ்சாப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பேசிய அவர், "இந்து பயங்கரவாதம் என்ற வார்த்தை உருவாக்கம், ஒட்டுமொத்த பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளையும் பலவீனப்படுத்துகிறது" என்றார்.

"முந்தைய அரசு 'இந்து பயங்கரவாதம்' என்ற வார்த்தையை உருவாக்கியது" என்று ராஜ்நாத் குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ராஜ்நாத் மேலும் பேசும்போது, "முந்தைய ஆட்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானி ஆகியோர் ஷார்ம்-எல்-ஷெய்க்கில் மேற்கொண்ட கூட்டுத் தீர்மானத்தின் தோல்வி, ஹவானாவில் நடைபெற்ற அணிசாரா நாடுகள் உச்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் சீனாவுக்கு எதிரான 1962 போர் என்று காங்கிரஸின் தோல்விகளை அடிகோடிட வேண்டும்" என்றார். அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

அதேவேளையில், குருதாஸ்பூர் தாக்குதல் குறித்து ராஜ்நாத் சிங் பேச்சை காங்கிரஸ் உறுப்பினர்கள் முழு கவனத்துடன் கேட்டனர். ஆனால், ராஜ்நாத் சிங் பேச்சை முடித்ததும் மீண்டும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புப் போராட்டத்தில் இறங்கினர். எனினும், அதைக் கண்டுகொள்ளாத ராஜ்நாத் சிங் காங்கிரஸ் கட்சியைத் தாக்கிப் பேசத் தொடங்கினார்.

"நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் பயங்கரவாதம். நாடாளுமன்றமோ, நாடோ இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு காணலாகாது. ஒரு புறம் நமது ராணுவ வீரர்கள் பயங்கரவாத எதிர்ப்புப் போரில் உயிர்த் தியாகம் செய்து வருகின்றனர், மற்றொரு புறம் நாம் இதனை எதிர்த்து குரல்களை எழுப்பி வருகிறோம். நாடாளுமன்றத்தை நடைபெறவிடாமல் தடுத்து வருகிறோம். நாடு இதனை எப்படி ஏற்றுக் கொள்ளும்?

நம் அரசும், பிரதமரும் இந்தச் சவால்களை எதிர்கொள்ள சீரான முறையில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இதே அவையில், 2013-ம் ஆண்டு, அப்போதைய உள்துறை அமைச்சர் (ப.சிதம்பரம்), 'இந்து பயங்கரவாதம்' என்ற புதிய சொல்லை உருவாக்கிக் கையாண்டார். இதன் மூலம் விசாரணைகளின் போக்கை திசை திருப்பினார். இதனால் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் பலவீனமடைந்தன. இதன் விளைவாக ஹபீஸ் சயீத் (லஸ்கர் நிறுவனர்), அன்றைய உள்துறை அமைச்சரை பாராட்டி வாழ்த்தினார். இந்த அரசு அத்தகைய வெட்கக் கேடான சூழ்நிலைகளை இனி அனுமதிக்காது" என்றார் ராஜ்நாத் சிங்.

ராஜ்நாத் சிங் கருத்துகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி கேட்டபோது சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் மறுத்து விட்டார்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டமும், கூச்சலும் தொடங்கியது. இதனால், சபாநாயகரிடம் மல்லிகார்ஜுன் கார்கே, "இது துரதிர்ஷ்டவசமானது, உங்கள் மீதான மரியாதையை நீங்கள் இழக்கிறீர்கள்" என்று கூறியதாகவும் தெரிகிறது. தொடர்ந்து ராஜ்நாத் சிங்குக்கு கார்கே பதில் அளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற காங்கிரஸ் கோரிக்கை விரயமானது.

SCROLL FOR NEXT