சோனாபத்ரா கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை காணச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவை கைது செய்து இடையூறு தந்திருப்பது பாஜக அரசாங்கத்தின் பாதுகாப்பற்ற தன்னிச்சையான அதிகாரப் போக்கையே வெளிப்படுத்தியுள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச பாஜக அரசை கடுமையாக தாக்கியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருப்பதாவது:
சோனாபத்ரா கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச் செல்லும்போது பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். பிரியங்கா சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது.
தங்கள் சொந்த நிலத்தை காலி செய்ய மறுத்ததற்காக பழங்குடி விவசாயிகள் 10 பேர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் குடும்பங்களைச் சந்திப்பதைத் தடுப்பதற்காக இந்தகைது நடவடிக்கை மூலம் இடையூறு ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
இக் கைது சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசாங்கத்தின் தன்னிச்சையான அதிகாரப் போக்கையே இது வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டினார்
பிரியங்கா காந்தி போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இக் கைது சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.