பீகார் மாநிலத்தின் கிராமம் ஒன்றில் மாடு திருட வந்ததாக சந்தேகிக்கப்பட்ட மூவர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் கிஷேோர் ராய் தெரிவித்தது:
சரண் மாவட்டத்தில் பனியாபூர் காவல் நிலையத்தின் எல்லைக்குள்ளான கிராமம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மூன்று பேர் மாடு திருடும்போதுபிடிபட்டதாகவும் அவர்கள் மூவரையும் கிராமத்தினர் கடுமையாக அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது.
மூன்று பேரில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் இருந்த இன்னொருவரை அவரது குடும்பத்தினர் சிகிச்சைபெறுவதற்காக மருத்துவமனை அழைத்துச் செல்லும்போது வழியிலேயே இறந்தார்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் ராஜூ நாத் இன்னொருவர் விதேஷ் நாத் மற்றொருவர் நவ்ஷத் குரேஷி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்தவர்களின்உடல்களை உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.