இந்தியா

தமிழக எம்பிக்களுக்கு பாராட்டு விழா நடத்திய டெல்லி தமிழ் சங்கம்

செய்திப்பிரிவு

ஆர்.ஷபிமுன்னா

தமிழக எம்பிக்களுக்கு டெல்லி தமிழ் சங்கம் பாராட்டு விழா நடத்தியது. இதில், டி.ரவிகுமார் தவிர திமுக மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் எம்பிக்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

ஒவ்வொரு மக்களவை தேர்தலுக்கு பின்பும் தம் மாநிலத்தில் இருந்து வென்ற எம்.பிக்களுக்கு டெல்லியில் உள்ள பல்வேறு மாநில சங்கங்கள் பாராட்டு விழா நடத்துவது வழக்கமாக உள்ளது.

இந்தவகையில், டெல்லி தெலுங்கு சங்கம் ஜுலை 16-ல் தம் மாநில எம்பிக்களுக்கு பாராட்டு விழா நடத்தி இருந்தனர். இதையடுத்து டெல்லி தமிழ் சங்கம் சார்பில் நேற்று மாலை தமிழக எம்.பிக்களுக்கும் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இதில், காங்கிரஸில் கே.ஜெயக்குமார், எச்.வசந்தகுமார், டாக்டர்.ஏ.செல்லக்குமார், மாணிக்கம் தாக்கூர் மற்றும் புதுச்சேரியின் முன்னாள் முதல்வரான வைத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் எம்.செல்வராஜ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கில் கே.நவாஸ் கனியும் விழாவில் பாராட்டுக்களை பெற்றனர்.

இவர்களுடன், அதிமுகவின் ஒரே எம்.பியான பி.ரவீந்திரநாத்தும் இவ்விழாவில் கலந்து கொண்டது பலரையும் ஆச்சரியம் அடைய வைத்தது. அனைத்து கட்சி எம்.பிக்களும் ஒரே மேடையில் இருந்ததை கண்டு நிகழ்ச்சிக்கு வந்த டெல்லி தமிழர்கள் மகிழ்ந்தனர்.

டெல்லி தமிழ் சங்கத்தின் தலைவர் இந்துபாலா தலைமையில் நடைபெற்ற விழாவில் அதன் பொதுச்செயலாளர் அனைவரையும் வரவேற்றார். இதில் கலந்துகொண்ட எம்பிக்கள் பேசியது பின்வருமாறு:

கே.ஜெயக்குமார்: தமிழகத்தை விட்டு வெளியே வசிக்கும் தமிழர்கள் தான் இன்று தமிழை வளர்த்து வருகின்றனர். ஒரு சமூகம் நேர்மையான அரசியல்வாதிகளால் சிறப்பாக வளரும். இதனால், இளைஞர்களும் அரசியலுக்கு வர வேண்டும். 

ரவீந்திரநாத் குமார்: தமிழகத்திற்கு வெளியே நான் கலந்துகொள்ளும் முதல் மேடை இது. இங்கு அமர்ந்துள்ளவர்கள் வெவ்வேறு கட்சியினராக இருப்பினும் அனைவருமே தமிழகத்தின் வளர்ச்சிக்காக இணைந்து பாடுபடுபவர்கள்.

தொல்.திருமாவளவன்: நாடாளுமன்றத்தில் ஆங்கிலம் தெரிந்தவர்களும் இந்தியில் பேசி அவர்கள் மொழியை வளர்த்துவது மெய்சிலிர்க்க வைக்கிறது. இதேபோல், மூத்த மொழியான தமிழிலேயே நாமும் அங்கு பேசி அதை வளர்த்துவோம். இதற்காகத்தான் அனைத்து எம்.பிக்களும் உறுத்மொழியை தமிழில் ஏற்றனர்.

கே.நவாஸ் கனி: தமிழ் பெயரால் தான் இங்கு அனைத்து கட்சியினரும் ஒன்றுகூடி உள்ளோம். இஸ்லாத்தில் இருப்பது போல், மனிதர்கள் இடையே ஏற்றத்தாழ்வு காட்டாதது தமிழ் மொழி மட்டுமே அனைவரையும் ஒன்றிணைத்து வளர்த்துகிறது. 

எம்.செல்வராஜ்: நாட்டிலேயே அதிகமான சாதனையாளர்கள் வளர்ந்த மண்ணாக இருப்பது தமிழகம். இதில் இருந்து வந்த நாம் அவர்கள் பெருமைகளை காக்கும்படி நடந்து கொள்வோம்.

 டி.ரவிகுமார்: செம்மொழிப் பட்டியலில் மலையாளம் சேர்க்கப்பட்ட தினத்தை கேரளாவில் கொண்டாடுகிறார்கள். இதைபோல், தமிழை செம்மொழியாக அறிவித்த தினத்தை நாமும் கொண்டாட வேண்டும். இந்நாளை டெல்லி தமிழ் சங்கம் இனி வருடந்தோறும் கொண்டாட வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான ரவிகுமாரின் கோரிக்கையை ஏற்று இனி செம்மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்ட தினத்தை இனி டெல்லி தமிழ் சங்கம் கொண்டாடும் என அதன் பொதுச்செயலாளர் முகுந்தன் மேடையில் அறிவித்தார்.

SCROLL FOR NEXT