பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

போக்குவரத்து நெரிசல்; பத்திரிகையாளர் மீது தாக்குதல்: காவலர்கள் சஸ்பெண்ட்

ஸ்ரீதரன்

உத்தரப் பிரதேசத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான போலீஸாரை தட்டிக்கேட்ட பத்திரிகையாளர் ஒருவர் தாக்குதலுக்கு ஆளான நிலையில்  குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு காவலர்கள் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து மூத்த காவல் கண்காப்பாளர் ஷலாப் மாத்தூர் தெரிவித்ததாவது:

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மதுராவில் உள்ள கோவர்தன் சாலையில் பாதையின் நடுவே போலீஸார் வாகனங்களை நிறுத்தியுள்ளனர். அப்போது பத்திரிகையாளர் ஷ்யாம் ஜோஷி என்பவர் காவலர்களிடம், இச்சாலையில் மக்கள் ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் எதிர்கொண்டுள்ளதால், தங்கள்வாகனத்தை சாலையின் நடுவே நிறுத்த வேண்டாம் என்று பணியில் இருந்த போலீஸ்காரர்களை கேட்டபோது அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் பலத்த காயத்துக்கு ஆளான பத்திரிகையாளர் ஷியாம் ஜோஷி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை பத்திரிகையாளர்களின் சார்பாக பிரதிநிதிகள் சிலர் தவறு செய்த காவல்துறை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரிக்கை வைத்தனர். 

அதன்படி காவல்துறை சார்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு நான்கு காவல்துறை ஊழியர்களும் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய போஸ்ட் இன்-சார்ஜ் ராஜேந்திர சிங், சப் இன்ஸ்பெக்டர் யஷ்பால் சிங், மற்றும் கான்ஸ்டபிள்கள் தர்மேந்திர குமார் மற்றும் ரோஹித் குமார் ஆகியோர்  இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் மண்டல இடமாற்றத்திற்கு வெளியே உயர் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு ஷலாப் மாத்தூர் தெரிவித்தார். 

SCROLL FOR NEXT