இந்தியா

அயோத்தி வழக்கு: மத்தியஸ்த குழுவுக்கு மேலும் அவகாசம்: ஆகஸ்ட் 1-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மத்தியஸ்த குழு அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் மேலும் கால அவகாசம் வழங்கியுள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி அறிக்கையை தாக்கல் செய்யஉத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் நீண்டகாலமாக இருந்துவரும் பாபர் மசூதி மற்றும் ராம ஜென்ம பூமி பிரச்சினையில் ஒருமித்த தீர்வுகாண உச்ச நீதிமன்றம் மத்தியஸ்தர்கள் குழுவை கடந்த மார்ச் மாதம் நியமித்தது. இக்குழுவுக்கு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் ஸ்ரீஸ்ரீ

ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு மேலும் கால அவகாசம் கோரி இருந்தனர்.

கடந்த ஜூலை 11-ம் தேதி வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு,  ''மூன்று உறுப்பினர்களின் மத்தியஸ்த குழுவின் தலைவர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி நீதிபதி (ஓய்வு) கலிஃபுல்லா, ஜூலை 18 க்குள் அறிக்கையை சமர்ப்பிக்கவும், ஜூலை 25 முதல் ஒவ்வொருநாள் அடிப்படையிலும் உச்ச நீதிமன்றம் நேரடியாக விசாரணை செய்யும்.'' என அறிவித்தார்.

இந்தநிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்தியஸ்த குழுவின் சார்பில் நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்,  மத்தியஸ்த குழு ஜூலை 31-ம் தேதி வரை கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம், அதன் பிறகு விரிவான நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.  அடுத்த விசாரணை ஆகஸ்ட்  2-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்தார்.

SCROLL FOR NEXT