முதல்வர் குமாரசாமியுடன் சகோதரர் ரேவண்ணா - கோப்புப் படம் 
இந்தியா

‘‘தவறு செய்து விட்டேன், என்னை மன்னியுங்கள்; தயவு செய்து வந்து விடுங்கள்’’ - அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ரேவண்ணா அழைப்பு

செய்திப்பிரிவு

பெங்களூரு

என்னை மன்னித்து விடுங்கள், தயவு செய்து திரும்பி வந்து விடுங்கள் என மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு முதல்வர் குமாரசாமியின் சகோதரரும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா அழைப்பு விடுத்துள்ளார்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசை ஆதரித்த 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் கடந்த இரு வாரங்களில் அடுத் தடுத்து ராஜினாமா செய்தனர். மும்பையில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் பைரத்தி பசவராஜ், விஸ்வநாத் உள்ளிட்ட 15 பேர் தங்களது ராஜினாமாவை ஏற்க சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர்  அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க வேண்டும் என உத்தரவு எதையும் நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது, அதிருப்தி எம்எல்ஏக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என தீர்ப்பு அளித்துள்ளது.

இதைத்தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையில் நாளை காலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் முதல்வர் குமாரசாமியின் சகோதரரும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தயவு செய்து வந்து விடுங்கள் என அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். இதுதொடர்பாக  அவர் கூறியதாவது:

நான் எந்த எம்எல்ஏவையும் வேதனைப்படுத்த மாட்டேன். அப்படி நான் யாரையாவது வேதனைபடுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் தவறு செய்து இருந்தால் அதனை திருத்திக் கொள்கிறேன். உங்களிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன். நீங்கள் வந்துவிடுங்கள். ஹசன் மாவட்டம் மற்றும் பொதுப்பணித்துறையுடன் எனது பணிகளை நிறுத்திக் கொள்கிறேன். மற்ற எந்த துறை விவகாரங்களிலும் இனிமேல் தலையிட மாட்டேன். மற்ற துறையில் நடைபெறும் பணியிட மாற்றல் விவகாரங்களில் இனிமேல் தலையிட மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT