இந்தியா

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த விரும்பவில்லை: மத்திய அமைச்சர்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை தொடர்ந்து எப்போதும் செயல்படுத்த அரசு விரும்பவில்லை என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

நூறு நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நாட்டின் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் மக்களவையில் இன்று விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுதுறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடந்தது. அப்போது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என எம்.பி.பிக்கள் பலரும் வலியுறுத்தினர். அப்போது நடந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியதாவது:

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு வழங்கப்படும் நிதி 60 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற வறுமையை ஒழிக்கவே நாங்கள் விரும்புகிறோம். இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் முறைகேடு பெருமளவு குறைந்துள்ளது. எனினும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற விருப்பம் இல்லை. வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT