பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (புதன்கிழமை) மதியம் கூடுகிறது. பிற்பகல் 1 மணியளவில் நாடாளுமன்றத்தின் இணைப்புக் கட்டிடத்தில் அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.
முன்னதாக மோடி 2-வது முறையாக பிரதமராகப் பதவியேற்றவுடன் கடந்த மே 31-ம் தேதி முதல்முறையாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார்.
அப்போது, பிராதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. முதல் 100 நாட்களில் நிறைவேற்றப்பட வேண்டிய செயற்திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இன்று நடைபெறவிருப்பது 2-வது அமைச்சரவைக் கூட்டம். இன்றைய கூட்டத்திலும் பல முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாது, பிரதமர் மோடி இன்று தனது இல்லத்தில் 46 வயது முதல் 57 வயது வரை உள்ள எம்.பி.,க்களை சந்திக்கிறார்.
தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) 57 வயதுக்கு மேற்பட்ட எம்.பி.க்களை சந்திக்கிறார். எம்.பி.,க்கள் சந்திப்பில் அமைச்சராக உள்ளவர்கள் இடம்பெறமாட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.