குஜராத் மாநில பனாஸ்கந்தா மாவட்டத்திலுள்ள தக்கோர் சமூகத்தைச் சேர்ந்த முதியவர்கள் தங்கள் சமூக பெண்களுக்கு சில விநோத கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அம்பலமாகியுள்ளது.
திருமணம் ஆகாத பெண்கள் செல்போன் வைத்துக் கொள்ளக் கூடாது; சாதி மறுப்பு திருமணம் செய்தால் அபராதம் போன்ற கட்டுப்பாடுகள் அதில் அடங்கும்.
கடந்த 14-ம் தேதி நடைபெற்ற ஊர் கூட்டத்தில் பனாஸ்கந்தா மாவட்டத்துக்கு உட்பட்ட தண்டிவாடா தாலுகாவில் உள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த தாக்கோர் சமூகத்தினருக்கும் இந்த கட்டுப்பாடுகளும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன நிபந்தனைகள்?
1. திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது. ஒருவேளை அவர்களிடம் செல்போன் இருப்பது கண்டறியப்பட்டால் பெற்றோர்களே அதற்கு பொறுப்பாக்கப்படுவார்கள்.
2. தாக்கோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்துவைத்தால் அவர்களுக்கு ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
3. திருமண வைபவங்களில் டிஜே கொண்டாட்டங்கள் கூடாது. பட்டாசு, வானவேடிக்கை கூடாது. அவற்றிற்கான செலவை சமூகத்தின் கல்வி மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தலாம்.
இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து ஊரைச் சேர்ந்த முதியவர்கள் கூறும்போது, "திருமணமாகாத பெண் பிள்ளைகளுக்கு செல்போன் பயன்படுத்த தடை விதிப்பதன் மூலம் அவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வழிவகை செய்ய முடியும்" என்றனர்.
இருப்பினும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரே ஒரு முடிவுக்கு பரவலாக வரவேற்பு இருக்கிறது. திருமண வைபவங்களில் டிஜே எனப்படும் டிஸ்கோ ஜாக்கிகளை வைத்து நிகழ்ச்சி நடத்துவது, வான வேடிக்கைக்கு அதிகமாக செலவழிப்பது ஆகிய பழக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக அந்த தொகையை தக்கோர் சமூகத்தினரின் கல்விச் செலவுக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரே ஒரு முடிவு வரவேற்பைப் பெற்றிருந்தாலும் மற்ற முடிவுகள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன.
ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்கள்..
சமூக வலைதளங்களில் இந்த விநோத கட்டுப்பாடுகளுக்கு விமர்சனம் எழுந்துள்ள நிலையில் தக்கோர் சமூகத்தைச் சேர்ந்தவரும் குஜராத் எம்.எல்.ஏ.வுமாக கனிபென் தாக்கோர் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். "பெண் பிள்ளைகள் செல்போனிலிருந்து விலகி நிற்பது நலமே. இந்தத் தடை மூலம் அவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த முடியும். நேரத்தை விரயமாக்கும் தொழில்நுட்பங்களிலிருந்து அவர்கள் விலகியிருந்து கல்வியில் கவனம் செலுத்தச் சொல்லும் இந்தக் கட்டுப்பாடில் எந்த தவறும் இல்லை" என்று அவர் கூறியுள்ளார்.
அதேவேளையில் மற்றுமொரு எம்.எல்.ஏ., அல்பேஷ் தாக்கோர் கூறும்போது," திருமண வைபங்களில் விரயமாக்கப்படும் பணத்தை கல்விச் செலவுக்கு மடைமாற்றுவது வரவேற்கத்தக்கது. ஆனால், பெண் பிள்ளைகளுக்கு மட்டும் செல்போன் தடை விதிப்பது ஏற்புடையதல்ல. செல்ஃபோனால் கல்வி பாதிக்கும் என்றால் அதை இருபாலருக்கும் பொதுவாக வைத்திருக்க வேண்டும்" என்றார்.
ஆனால், இரண்டு எம்.எல்.ஏ,க்களுமே சாதி மறுப்பு திருமணத்துக்கு அபராதம் விதிக்கும் கட்டுப்பாடு குறித்து கருத்து சொல்லவில்லை.
குஜராத்தில் தற்போது பாஜக ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. நரேந்திர மோடி அங்கு தொடர்ந்து பல முறை முதல்வராக இருந்துள்ளார். பெண் குழந்தைகள் மேம்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் ஆண்ட மாநிலம், அவர் சார்ந்த கட்சி ஆளும் மாநிலத்தில் இப்படி விநோத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.