இந்தியா

கர்நாடக அரசியல் சிக்கல்; அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு; உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகரை தங்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்க உத்தரவிடக்கோரி அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆளும் கூட்டணி மீது அதிருப்தி அடைந்த  காங்கிரஸைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்கள், மஜதவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் உட்பட 16 எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து ஆளும் கூட்டணி பெரும்பான்மை இழந்து விட்டதால் குமாரசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியான பாஜக வலியுறுத்தி வருகிறது. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாக முதல்வர் குமாரசாமி கூறினார். சட்டப்பேரவையில் ஜூலை 18-ம் தேதி காலை 11 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் கர்நாடக சபாநாயகர் முடிவு எடுக்காததால் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றம் வரும் செவ்வாய்கிழமை வரை இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இவர்கள் மட்டுமின்றி வேறு 5 எம்எல்ஏக்களும் தங்கள் ராஜினாமாவை ஏற்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையின்போது, அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ‘‘எம்எல்ஏ தனது  பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணங்களையும், பின்னணியையும் சபாநாயகரிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ராஜினாமா செய்ய முடியும். இதை காரணமாக கூறி அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் காலம் தாழ்த்தி வருகிறார். உடனடியாக முடிவு எடுக்க சபாநாயகரை நீதிபதி வற்புறுத்த வேண்டும்’’ எனக் கூறினார்.

இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ‘‘சபாநாயகர் முடிவெடுக்கும்படி நீதிமன்றம் வற்புறுத்த முடியாது. இதை சட்டரீதியாக மட்டுமே அணுக முடியும். சபாநாயகர் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் சொல்ல முடியாது. அவர் எடுத்து முடிவு சட்டப்படியாக இருக்கிறதா என்பதை மட்டுமே எங்களால் சொல்ல முடியும். அவர் முடிவெடுக்காமலேயே அதை பற்றி நாங்கள் உத்தரவு பிறப்பிப்பது பொருத்தமாக இருக்காது’’ எனக் கூறினார். இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் நாளை காலை 10:30 மணியளவில் தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT