மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ்.
முன்னதாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மும்பை டோங்கிரி பகுதியில் முகமது அலி சாலையில் உள்ள அப்துல் ஹமீது தர்கா அருகே கேசர் பாய் என்ற குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் இதுவரை இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தை உள்பட 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் 20 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டோங்கிரி போலீஸாருடன் ஜெ.ஜெ.நகர், எம்.ஆர்.நகர் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விபத்து நடைபெற்ற பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மனிதச் சங்கிலியாக நின்று கட்டிட இடிபாடுகளை இடித்து அனுப்பப்படும் கல், மணல் கழிவுகளை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ், "எனக்குக் கிடைத்த முதல் தகவலின்படி இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் 15 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சிக்கியிருக்கின்றனர். அந்தக் கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது. அதில் வசித்தவர்கள் மகாராஷ்டிரா வீட்டு வசதி வாரியத்தை அணுகி கட்டிடத்தை சீரமைக்க அனுமதி கோரியுள்ளனர். இந்நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்போதைக்கு முழு கவனமும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பதில்தான் இருக்கிறது. கட்டிட விபத்துக்கான காரணம் உறுதி செய்யப்பட்ட பின்னர் நிவாரண நிதி குறித்த அறிவிப்பு வெளியாகும்" என்றார்.
விபத்துக்குள்ளான கேசர்பாய் குடியிருப்புக்கு அருகே உள்ள இஸ்மாயில் ஹபீப் குடியிருப்பிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி வருகின்றனர். அந்த குடியிருப்பும் லேசாக ஆட்டம் காண்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அப்புறப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.