பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் மூன்றாம் பாலினத்தவருக்கு ரூ.1.5 லட்சம் நிதியுதவியை அரசு அளிக்கும், அவர்களுக்கு வாடகைக்கு வீடு மறுப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பிஹார் அரசு அறிவித்துள்ளது.
பிஹாரில் மூன்றாம் பாலினத்தவருக்காக ஒருங்கிணைக்கப்படும் கின்னார் மஹோத்ஸவா விழாவை துவக்கிவைத்துப் பேசிய அம்மாநில துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, "மூன்றாம் பாலினத்தவர் பாலின மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டால் அவர்களுக்கு அரசு ரூ.1.5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கும். மூன்றாம் பாலினத்தவர் என்பதாலேயே அவர்களுக்கு வாடகை வீடு மறுப்பவர்களுகும், மருத்துவ சிகிச்சை மறுப்பவர்களுக்கும் 6 மாதம் முதல் 2 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்" என்றார்.
மேலும் பேசும்போது, "புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிஹார் ராஜ்ய கல்யாண் வாரியம் (Bihar State Transgender Welfare Board) பிற மாநிலங்களில் மூன்றாம் பாலினத்தவருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்து ஆராய்ந்து அவற்றில் ஏதேனும் இங்கு விடுபட்டிருந்தால் அதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்" என்றார்.
பிஹாரில் மட்டும்தான் மூன்றாம் பாலினத்தவருக்காக அரசு சார்பில் ஒரு விழா ஒருங்கிணைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.