பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவைக்கு வராத அமைச்சர்கள் குறித்த தகவலைக் கோரியுள்ளார். மேலும், எம்.பி.க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டில் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, எம்.பி.க்கள் மத்தியில் பேசும்போது, "உங்கள் மீதான முதல் அபிப்ராயம்தான் கடைசி அபிப்ராயமாகவும் இருக்கும். அதனால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தொகுதி மேம்பாட்டில் கவனம் செலுத்துங்கள். முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுங்கள்.
தொழுநோய் ஒழிப்பு, காசநோய் ஒழிப்பு போன்றவற்றில் எம்.பி.க்கள் கவனம் செலுத்தவேண்டும்" எனப் பேசியதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
முதல் முறை எம்.பி.க்கள் நிறைய பேர் இருக்கும் நிலையில் பிரதமரின் இந்த அறிவுரை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அதேபோல், மத்திய அமைச்சர்கள் அவைக்கு ஒழுங்காக வர வேண்டும். எதிர்க்கட்சியினர் துறை சார்ந்த கேள்வி எழுப்பும்போது அந்தந்த இலாகா அமைச்சரோ அல்லது இணை அமைச்சர் அவையில் இருப்பது அவசியம். ஒருவேளை அவைக்கு வரவில்லை என்றால் தன்னிடம் அது குறித்து முன்னரே தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
அவைக்கு வராத அமைச்சர்கள் குறித்த பட்டியலைத் தயாரித்துத் தருமாறும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கூறியிருப்பதாக ஏஎன்ஐ செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.
இதற்கு முன்னதாகவும் பிரதமர் அமைச்சர்களின் வருகைப் பதிவு பேசியிருக்கிறார். அப்போது அவர், மத்திய அமைச்சர்கள் சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்கு வரவேண்டும், வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காந்தியை சுட்டிக்காட்டிய மோடி..
எம்.பி.க்கள் காசநோய் ஒழிப்பு, தொழுநோய் ஒழிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்த வலியுறுத்தியபோது பிரதமர் மோடி தேசத்தந்தை மகாத்மா காந்தியை மேற்கோள் காட்டினார்.
மகாத்மா காந்தி தன்னை தொழுநோய் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு அழைப்பதைவிட மூடுவிழாவுக்கு அழைத்தால் மகிழ்வேன் என்று கூறியதை மேற்கோள் காட்டிய மோடி நோய் ஒழிப்பில் தொகுதிக்குள் எம்.பி.க்கள் இந்த அணுகுமுறையோடு செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்தியாவில் காசநோய் ஒழிப்புக்கு 2025 இலக்காக வரையறக்கப்பட்டிருப்பதாகவும் மோடி கூறியிருக்கிறார்.