இந்தியா

இந்திய ராணுவத்துக்கு ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கிய முன்னாள் விமானப்படை அதிகாரி

செய்திப்பிரிவு

இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் தனது வாழ்நாள் சேமிப்பிலிருந்து ரூ1 கோடி பணத்தை இந்திய ராணுவத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக பிரசாத் (74) என்ற அந்த ஒய்வு பெற்ற அதிகாரி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "இந்திய விமானப் படையில் நான் 9 ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போது இந்திய ரயில்வேயில் வேலை கிடைக்க வாப்பு ஏற்பட்டதால் விமானப்படையிலிருந்து விலகினேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எனக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. சரி, தொழில் தொடங்கலாமே என்ற யோசனையில் கோழிப்பண்ணை அமைத்தேன். நான் எதிர்பாராதவிதமாக அது நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுத்தது. அப்போது எனக்கு ஒரு சிந்தனை உதித்தது. ராணுவத்திடம் நான் பெற்ற ஊதியம் மற்றபிற சலுகைகளைத் திரும்பித்தர வேண்டும் என்று தோன்றியது. அதனால், ரூ.1.08 கோடியை எனது சொந்த சம்பாத்தியத்திலிருந்து ராணுவத்துக்கு நன்கொடையாக வழங்கினேன்" என்றார்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பிரசாத் அந்தத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.
பிரசாத்தின் இந்த முடிவுக்கு அவரது குடும்பத்தினரும் சம்மதித்துள்ளனர். "எனது சம்பாத்தியத்தின் 2% தொகையை என் மகளுக்கு கொடுத்தேன். 1 சதவீதத்தை எனது மனைவிக்குக் கொடுத்தேன். மீதமுள்ள 97% பணத்தை சமூகத்துக்கு கொடுத்துள்ளேன்" என்று பெருமிதத்துடன் அவர் கூறினார்.

இந்த எண்ணம் எப்படி உதித்தது என்ற கேள்விக்கு, "20 ஆண்டுகளுக்கு முன்னதாக நான் விமானப் படையில் பணிபுரிந்தபோது தமிழகத்தின் கோவை நகரைச் சேர்ந்த ஜி.டி.நாயுடு என்ற நபர் ஒரு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
அவர் பேசும்போது, நம் தேசத்தின் ஞானிகள், மக்கள் தங்கள் குடும்பத் தேவைகள் நிறைவேறியவுடம் மீதமுள்ள சேமிப்பை சமூகத்துக்கு அளிக்க வேண்டும் என போதித்துள்ளனர். அதனால்தான் இந்தியா சிறந்து விளங்குகிறது என்றார். அது எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆகவே என் குடும்பத்தினரின் தேவைக்குப் போக மீதமுள்ளதை சமூகத்துக்கே கொடுத்துவிட்டேன்.

நான் வீட்டிலிருந்து செல்லும்போது வெறும் 5 ரூபாயுடன் சென்றேன். இப்போது 500 ஏக்கார் நிலத்தை சம்பாதித்துள்ளேன். அதில் என் மனைவிக்கு 5 ஏக்கர், மகளுக்கு 10 ஏக்கர் கொடுத்துவிட்டேன். மீதமுள்ளதை என் சமூகத்துக்கு அளித்துள்ளேன். தேசத்துக்காக ஒலிம்பிக் மெடல் வாங்க வேண்டும் என முயற்சித்தேன். அது முடியவில்லை. அதனால் இப்போது விளையாட்டு பல்கலைக்கழகம் மூலம் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்துவருகிறேன். ஏற்கெனவே ஆண் குழந்தைகளுக்காக விளையாட்டு பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளேன். அதேபோல் பெண் பிள்ளைகளுக்காகவும் ஒரு விளையாட்டு பல்கலைக்கழகம் ஆரம்பிக்க வேண்டும் என்றார்.
 

SCROLL FOR NEXT