இந்தியா

கர்நாடக அரசியல் சிக்கல்: அதிருப்தி எம்ல்ஏக்கள் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

செய்திப்பிரிவு

புதுடெல்லி
கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகரை நேரில் சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை அதிருப்தி எம்எல்ஏக்கள் அளித்துள்ள நிலையில் அதன் மீது உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. 

கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆளும் கூட்டணி மீது அதிருப்தி அடைந்த  காங்கிரஸைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்கள், மஜதவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் உட்பட 16 எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்தனர்.

கர்நாடக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் குமாரசாமி, பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிப்பதற்கு தேவையான நடவடிகைகளை ஆளும் கூட்டணி செய்து வருகிறது.சட்டப்பேரவையில் ஜூலை 18-ம் தேதி காலை 11 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இவர்களின் ராஜினாமா ஏற்காத நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றம் வரும் செவ்வாய்கிழமை வரை இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவர்கள் மட்டுமின்றி வேறு 5 எம்எல்ஏக்களும் தங்கள் ராஜினாமாவை ஏற்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி சபாநாயகரை நேரில் சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்துள்ள நிலையில் அதன் மீது உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. 

SCROLL FOR NEXT