கர்நாடகா முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் பெங்களூரு விமான நிலையத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக முதல்வர் குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
கர்நாடகாவில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. வரும் 18-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், பல கோடி மதிப்பிலான ஐஎம்ஏ ஊழல் வழக்கு தொடர்பிலான சிறப்பு விசாரணைக் குழு ஒன்று, மாநில அரசுக்கு எதிராக மாறிய காங்கிரஸின் ரோஷன் பெய்க்கைக் கைது செய்திருப்பதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் அடுத்தடுத்து பதிவு செய்த இரண்டு ட்வீட்களில், "ஐஎம்ஏ ஊழல் வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு கர்நாடகா முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்கை விமான நிலையத்தில் கைது செய்தது. கைது நடவடிக்கையின்போது ரோஷனுடன் பாஜக தலைவர் எடியூரப்பாவின் தனிப்பட்ட உதவியாளர் சந்தோஷ் இருந்ததாக அதிகாரிகள் என்னிடம் கூறினர். அதிகாரிகளைப் பார்த்தவுடன் சந்தோஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மேலும், பாஜக எம்.எல்.ஏ., யோகேஷ்வரும் அங்கு இருந்தார்.
ஊழல் வழக்கை எதிர்நோக்கும் முன்னாள் அமைச்சர் தப்பிப்பதற்கு பாஜக துணை நிற்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. கர்நாடக அரசைப் பலவீனப்படுத்த பாஜக முயல்வதை இது காட்டுகிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
ஆனால் பாஜகவோ, குமாரசாமி தற்போது ஆட்டம் காணும் தனது அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காகத் பெய்கை சிறப்பு புலனாய்வு அதிகாரிகளைக் கொண்டு மிரட்டுவதாகத் தெரிவித்துள்ளது.
கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பெய்க் கடந்த 8-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.