தேசிய விசாரணை முகமையான என்.ஐ.ஏ. என்ற தீவிரவாத ஒழிப்பு அமைப்பை வலுப்படுத்தும் என்.ஐ.ஏ மசோதா மக்களவையில் திங்களன்று நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
என்.ஐ.ஏ. திருத்தச் சட்டம் 2019, என்பதை துஷ்பிரயோகம் செய்யும் கவலைகளை எதிர்க்கட்சிகள் வெளியிட அதனை புறமொதுக்கிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மதச்சார்புடன் மத்திய அரசு ஒருபோதும் இதனை துஷ்பிரயோகம்செய்யாது, மாறாக குற்றம்சாட்டப்பட்டவர் என்ன மதத்தினராக இருந்தாலும் தீவிரவாதம் எந்த வடிவத்திலும் ஒழிக்கப்பட வேண்டியது என்பதை உறுதி செய்யும் மசோதாவாகும் இது என்று அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.
பொடா சட்டத்தை வாக்கு வங்கி அரசியல் நலன்களுக்காக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ரத்து செய்தது, துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதற்காக அல்ல என்று எதிர்க்கட்சிகள் மீது ஒரு சூடான விமர்சனங்களை முன் வைத்தார், இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மேலும் அமித் ஷா கூறும்போது பொடா சட்டத்தை நீக்கிய பிறகு தீவிரவாதம் தலைதூக்கியது, இதனையடுத்து 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இதே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் தேசிய விசாரணை முகமையையும் உருவாக்கியது.
தற்போது இந்தச் சட்டத்திருத்த மசோதாவுக்கு அனைத்து கட்சிகளின் ஆதரவு கிடைக்கவில்லை என்றால் அது தீவிரவாதத்துக்கு தவறான சமிக்ஞைகளை வழங்குவதாகி விடும் என்று அமித் ஷா பேசினார்.
எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டத்தை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு ஆளும் கட்சி பயன்படுத்தும் என்று அச்சத்தை முன்னதாக வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.