இந்தியா

‘சித்து ராஜினாமா மிரட்டல் நாடகம்’- சக அமைச்சர்கள் கடும் விமர்சனம்: பஞ்சாபிலும் காங்கிரஸுக்கு நெருக்கடி

செய்திப்பிரிவு

சண்டிகர்

பஞ்சாப் அமைச்சர் சித்துவின் ராஜினாமா மிரட்டல் நாடகம் என காங்கிரஸைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கடந்த மாதம் பஞ்சாப் அரசில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது சித்துவிடம் இருந்து சுற்றுலாத்துறை கலாச்சார விவகாரங்கள் பறிக்கப்பட்டன.அதற்கு பதிலாக எரிசக்தி மற்றும் புதுப்பிக்கதக்க எரிசக்தி அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

கடந்த மாதம் 10-ம் தேதியே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டது போன்ற கடிதத்தை சித்து தற்போது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ட்விட்டரில் சித்து வெளியிட்ட பதிவில், " பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து நான் ராஜினாமா செய்துவிட்டேன். ராகுல் காந்திக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டேன் " என்று தெரிவித்தார். 2-வது ட்விட்டில் " என்னுடை ராஜினாமா கடிதத்தை முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் அனுப்பி இருக்கிறேன் " எனத் தெரிவித்தார்.

இந்தநிலையில் சித்துவின் ராஜினாமா முடிவு குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு அமைச்சர்களான மொஹிந்திரா மற்றும் சரண்ஜித் சிங் ஆகியோர் இன்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் ‘‘முன்னாள் கிரிக்கெட் வீரரும், அமைச்சருமான சித்து பதவியேற்றது முதலேய மிரட்டல் நாடகத்தை கையில் எடுத்து வருகிறார். தற்போது ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளதும் அவரது மிரட்டல் நாடகத்தின் ஒரு பகுதி தான். அவர் மீது கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார். இதனால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடையே மோதல் அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு சிக்கலில் தவித்து வரும் நிலையில் பஞ்சாபிலும் அக்கட்சி நிர்வாகிகள் இடையே மோதல் முற்றிள்ளது.

SCROLL FOR NEXT