இந்தியா

பாஜக பொதுச்செயலாளராக ராம்லால் இடத்தில் பி.எல்.சந்தோஷ்

செய்திப்பிரிவு

ஆர்.ஷபிமுன்னா

பாஜகவின் பொதுச்செயலாளராக 13 வருடங்கள் பணியாற்றிய ராம்லால், தன் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கிற்கு திரும்பி விட்டார். இதனால், அவரது பதவிக்கு இணைச்செயலாளர்களில் ஒருவரான பி.எல்.சந்தோஷ் உயர்த்தப்பட்டுள்ளார்.

இது குறித்த உத்தரவை, பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா உத்தரவின் பேரில் அவரது தலைமை நிர்வாக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் நேற்று வெளியிட்டுள்ளார். இதன்படி, சந்தோஷ் அப்பதவியில் நேற்று முதலே உடனடியாக செயல்படத் தொடங்கினார்.

ராம்லாலை, ஆர்எஸ்எஸ் திரும்ப அழைத்துக் கொண்ட செய்தி நேற்று ஜுலை 14-ல் ‘இந்து தமிழ் திசை’ இணையத்தில் வெளியாகி இருந்தது. கர்நாடகாவை சேர்ந்த சந்தோஷ், அம்மாநிலத்தின் பாஜக இணைச்செயலாளராக கடந்த 2006 ஆம் ஆண்டில் அமர்த்தப்பட்டிருந்தார்.

பிறகு 2014-ல் அக்கட்சியின் தேசிய இணைசெயலாளராகப் பதவி ஏற்றவருக்கு தமிழ் மொழி பேசத் தெரியும். இவரும், பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ல் இருந்து அனுப்பப்பட்டவர்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவுடன் சந்தோஷுக்கு நல்ல நட்பு உள்ளது. இவரது யோசனைகளின்படி பாஜக தென்மாநில அரசியலில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

பாஜகவில் அதன் தலைவருக்கு அடுத்தபடியான சந்தோஷுக்கு அளிக்கப்பட்டுள்ள பொதுச்செயலாளர் (அமைப்பு) எனும் பதவி ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கே அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அக்கட்சி தம் கொள்கைகளை பரப்புவதில் தீவிரம் காட்ட வேண்டும் எனும் ஆர்எஸ்எஸ் விருப்பம் காரணமாக உள்ளது.

SCROLL FOR NEXT