கோவாவில் நீர் மேம்பாட்டுத் திட்ட ஒப்பந்தத்தைக் கைப்பற்ற அமெரிக்க நிறுவனமான லூயி பெர்கர், அமைச்சர்கள் சிலருக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறி இருந்தது. இந்நிலையில், அந்த நிறுவனத்தினரை தான் சந்தித் ததே இல்லை என்று கோவா முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான போலீஸ் விசாரணைக்கு அவர் நேற்று முன்தினம் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்நிலை யில், நேற்றும் அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த காமத், "இந்த விஷயத்தில் அமெரிக்க நிறுவனத்தினரை நான் எப்போதும் சந்திக்கவே இல்லை. அவர்களிடமிருந்து லஞ்சமும் பெறவில்லை. இதை இந்த வழக்கின் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன். நான் இன்று கோவா போலீஸார் முன்பு ஆஜராக உள்ளேன்" என்றார்.
இந்த வழக்கு தொடர்பாக, நேற்று முன்தினம் விசாரிக்கப்பட்ட முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் சர்ச்சில் அலிமாவோ நேற்றும் விசாரணைக்கு ஆஜரானார்.
இதனிடையே, கோவா துணை முதல்வர் பிரான்சிஸ் டிசோசா செய்தியாளர்களிடம் கூறும்போது, "கோவா அரசியல் வாதிகள் இப்படிப்பட்ட செயல் களில் ஈடுபடமாட்டார்கள் என்று இதுநாள் வரை நினைத்திருந் தோம். ஆனால் இந்தச் சம்பவம் கோவா அரசியல் வட்டாரத்துக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி யுள்ளது" என்றார்.