இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
முன்னதாக, ஜம்முவில் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று (வியாழக்கிழமை) காலை அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 4 பேர் காயமடைந்தனர். எல்லையில் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது இம்மாதத்தில் இது 9-வது முறையாகும்.
நேற்று, ஜம்மு மாவட்டம், அக்னூர் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் பலியானார். எல்லை பாதுகாப்பு வீரர் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை காஷ்மீர் செல்லவுள்ள நிலையில் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
அண்மையில், நாக்பூரில் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத் சிங், எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.