குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை (திங்கள்கிழமை) மாலை நடைபெறும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கான பாதுகாப்புப் பணியில் 10 ஆயிரம் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
நாட்டின் 15-வது பிரதமராக மோடி நாளை மாலை 6 மணிக்கு பதவியேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வெளியே திறந்த வெளியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அண்டை நாடுகளின் தலைவர்கள் உள்பட 3000 அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிகழ்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டெல்லி போலீஸ் இணை கமிஷனர் எம்.கே.மீனா இன்று கூறும்போது, குடியரசுத் தலைவர் மாளிகையைச் சுற்றிலும் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என்று தெரிவித்தார்.
துணை ராணுவப்படையினர், தேசிய பாதுகாப்பு படை வீரர்கள், டெல்லி போலீஸ் கமாண்டோக்கள் உள்பட சுமார் 10 ஆயிரம் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
புது டெல்லியில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பொதுமக்கள் கூடாதவகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.