இந்தியா

கலாம் அமர் ரஹே, பாரத் மாதா கீ... ஜே! - கலாமின் கடைசிப் பயணம்

செய்திப்பிரிவு

- ஷில்லாங்கிலிருந்துகிருஷ்ணா ராம்குமார், ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர்:

மேகாலயாவுக்கு நான் வந்தது இங்குள்ள மக்களின் பிரச்சினைகளைப் பற்றி எழுத. அவர்களின் வாழ்க்கையை எழுத. இப்போது மேகாலயத்தின் ஆளுநர் ஒரு தமிழர் சண்முகநாதன் என்பதால், அவருடைய பேட்டியையும் பெறத் திட்டமிட்டிருந்தேன்.

இங்கு கடந்த சில நாட்களாகவே அப்துல் கலாம் பற்றிய பேச்சு அடிபட்டுக்கொண்டிருந்தது. ஷில்லாங் ஐஐஎம்-க்கு ஆண்டுக்கு ஒரு முறை இரு நாட்கள் கவுரவப் பேராசிரியராக வரு வாராம் கலாம். முழுக்க ஆசிரியப் பணி நிமித்தம்தான்.

இது இங்குள்ள இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு விஷயம். எப்படி யென்றால், பொதுவாக வடகிழக்கு மாநிலங்கள் இந்தியச் சமூகத்திலிருந்து தனித்து, கவனிப் பாரற்று இருக்கும் மனநிலையில் இருப்பவை. டெல்லியிலிருந்தோ, இந்தியாவின் ஏனையப் பகுதிகளிலிருந்தோ யார் வந்தாலும் அவர் களுக்கு சந்தோஷம்தான். கலாம் தங்கள் இளைஞர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க வருகிறார் என்பதால், அது கூடுதல் சந்தோஷம்.

அன்று மாலைகூட அப்படித்தான் ஒரு நண்பர் உற்சாகமாக கலாம் பற்றிப் பேசிக்கொண் டிருந்தார். திடீரென்று ஓர் அழைப்பு வந்தது. கலாம் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்தார்; மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார் என்று. அடுத்த ஒரு சில நிமிடங்களில் அடுத்த தகவல் வந்தது. கலாம் உயிருக்கு ஆபத்து என்று. ஷில்லாங்கின் மூத்தப் பத்திரிகையாளர்களில் ஒருவரான பெட்ரிஷியா முக்கிமைத் தொடர்பு கொண்ட போது அவரும் தகவலை உறுதி செய்தார்.

நான் இருந்த போலீஸ் பஜாரிலிருந்து கலாம் கொண்டுசெல்லப்பட்ட பெதானி மருத்துவ மனைக்குச் செல்ல அதிகபட்சம் கால் மணி நேரப் பயணம்தான். காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். அப்போது மருத்துவ மனை வாசலில் பத்து பதினைந்துப் பேரைத் தவிர யாரும் இல்லை. எல்லாம் பெரும்பாலும் ஊடகவியலாளர்கள்; ஐஐஎம் நிறுவனத்திலி ருந்து வந்தவர்கள். கொஞ்ச நேரத்தில் ஆளுநர் வந்தார், அமைச் சர்கள் வந்தார் கள். அடுத்தடுத்த நிமி ஷங்களில் அங்கு உள்ளே சென்று திரும்பு பவர்களின் முகத்தைப் பார்த்தபோது விபரீதம் புரிய ஆரம்பித்தது. மனதை இனம் கொள்ள முடியா சோகம் பீடித்து அடித்துத் துவைக்க ஆரம்பித்தது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் ஷில்லாங்கில் செய்தி தீபோலப் பரவியது. “கலாம் காலமாகி விட்டார்; அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ஓரிரு மணி நேரம் ஆகலாம்…”

ஐயாயிரம் பேர் கூடியிருப்பார்களா, இன்னும் அதிகம் இருக்குமா? தங்கள் நேசத்துக்குரிய முன்னாள் குடியரசுத் தலைவருக்கு அஞ்சலி செலுத்த அந்த இரவிலும் ஷில்லாங்கில் நூற் றுக்கணக்கான இதயங்களகுவிந்துகொண்டே இருந்தன. மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டபோது, கூடியிருந்த வர்கள் உணர்ச்சிப் பெருக்கெடுத்து அழ ஆரம்பித்தார்கள். யாரோ ஓர் இளைஞர் உரத்த குரலில் கத்தினார்: “கலாம் அமர் ரஹே, பாரத் மாதா கீ…” அடுத்த நொடி அந்த இடமே ஒருமித்த குரலில் அதிர்ந்தது “ஜே!”

அதன் பின்னர் கலாம் உடல் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு இடத்திலும் இந்த முழக்கங்களைக் கேட்க முடிந்தது. பின்னர், கலாமின் உடல் ராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின் அங்கிருந்து விமானப் படைப் பயிற்சியகத்துக்கு. ஆளுநர் சண்முக நாதன் மலர் வளையம் வைக்கும்போது அவரையும் மீறி கட்டுப்படுத்த முடியாமல் கண் கலங்கினார்.

ஷில்லாங்கிலிருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டது. முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன: “கலாம் அமர் ரஹே, பாரத் மாதா கீ… ஜே!”

SCROLL FOR NEXT