நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்தும், ராணுவ வீரர்களுக்கு ஒரே அளவிலான ஓய்வூதியத்தை வலியுறுத்தியும் வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடு படப்போவதாக அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும் போது, “டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் அக்டோபர் 2-ம் தேதி காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தைத் தொடங்கு கிறேன்” எனத் தெரிவித்தார்.
நிலம் கையகப்படுத்தும் மசோதா மற்றும் ஒரே தகுதி நிலையிலான ராணுவ வீரர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பிரதமருக்கு ஹசாரே கடிதம் எழுதியிருந்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்ட ஹசாரேவுக்கு நாடு தழுவிய அளவில் பெரும் வரவேற்பு கிடைத் தது. இந்நிலையில் அவர் மீண்டும் பெரிய அளவில் போராட்டம் நடத் தப்போவதாக தெரிவித்துள்ளார்.
வரும் 26-ம் தேதி தியாகிகள் தினத்தை முன்னிட்டு, ராணுவ வீரர் குடும்பத்தைச் சேர்ந்த விதவைகள், ராணுவ வீரர்களின் தாய் ஆகியோரை அவர் கவுரவிக்க உள்ளார். தொடர்ந்து, விவசாயிகள், ராணுவ வீரர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களை நாடு தழுவிய அளவில் நடத்தப்போவதாக ஹசாரே அறிவித்துள்ளார்.