இந்தியா

ஜனநாயகத்தை கொண்டாடி மகிழவே ராஜபக்சே, நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு: ஆட்சேபங்களை நிராகரித்து பாஜக விளக்கம்

செய்திப்பிரிவு

பிரதமராக பாஜக தலைவர் நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை என பாஜக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

மோடி பதவியேற்பு விழாவுக்கு வரும்படி இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்துள்ளதற்கு எழும் ஆட்சேபங்களை பாஜக நிராகரிக்கிறது.

சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு விடுத்துள்ள அழைப்பு ஜனநாயகத்தின் மகிழ்ச்சிமிகு கொண்டாட்டத்தில் பங்கேற்க வைப்பதற்கானதாகும்.இந்த கண்ணோட்டத்தில்தான் இந்த அழைப்பை நாம் கருதவேண்டும். புதிய பிரதமர் பதவியேற்கும் நிகழ்ச்சியில் நல்லெண்ணத்தை உருவாக்குவதற்கான பொறுப்புமிக்க அடையாளமாகவே சார்க் நாடுகளுக்கு விடுத்த அழைப்பை நாம் பார்க்க வேண்டும்.

இந்த உவகை மிக்க நிகழ்ச்சியில் நமது பக்கத்து நாடுகள் பங்கேற்பதை வரவேற்கிறோம்.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட தலைவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் அவர்களும் காரணத்தை புரிந்து கொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் நிர்மலா சீதாராமன்.

சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு விடுத்துள்ள அழைப்பு புதிய அரசு எடுத்துள்ள ஆக்கபூர்வ நடவடிக்கை என்று் பாஜகவின் மற்றொரு செய்தித்தொடர்பாளர் கேப்டன் அபிமன்யு தெரிவித்திருக்கிறார்.

அடல் பிகாரி வாஜ்பாயின் வழியில்தான் தமது பக்கத்து நாடுகளின் தலைவர்களுக்கும் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார் என்றார் பாஜக தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் ஜவடேகர்.-பிடிஐ

SCROLL FOR NEXT