அசாம் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற என்கவுன்ட்டரில் கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் (கேபிஎல்டி) என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கர்பி அங்லாங் மாவட்டம் துனி டோக்பி கான் அருகே கேபிஎல்டி அமைப்பின் தீவிரவாதிகள் நடமாடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவத்தின் ரெட் ஹார்ன் பிரிவு மற்றும் போலீஸார் அடங்கிய கூட்டுப் படை சம்பவ இடத்துக்குச் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியதுடன் தப்பி ஓட முயற்சித்தனர்.
இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் கேபிஎல்டி தீவிரவாத அமைப்பின் தளபதி உட்பட 3 பேர் பலியாயினர்.
மேலும் ஏகே ரக துப்பாக்கி, 2 பிஸ்டல்கள், 6 பைகள், ஆவணங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, அப்பகுதியில் பயிற்சி முகாம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கை தீவிரவாதிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.