இந்தியா

நிலமோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மனோஜ் குமார் கைது

பிடிஐ

ஆம் ஆத்மி கட்சிக்கு மேலும் ஒரு சங்கடமாக அக்கட்சியின் எம்.எல்.ஏ. மனோஜ் குமார் இன்று டெல்லி அசோக் விஹார் போலீஸாரால் நிலமோசடி புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

பிறகு இவர் தலைமை மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். மேஜிஸ்ட்ரேட் சவுரவ் பிரதாப் சிங் ஜூலை 11 வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

இவர் கிழக்கு டெல்லியின் கோண்ட்லி தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது குறித்து டெல்லி கிழக்குப் பகுதி காவல்துறை இணை ஆணையர் சஞ்சய் பிஸ்வால் கூறும்போது, “மோசடி வழக்கு தொடர்பாக இவரைக் கைது செய்துள்ளோம். இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இவர் மீது இந்திய கிரிமினல் சட்டம் 468, 471, 420, 120பி ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனோஜ் குமார் மீது கடந்த ஆண்டு மோசடி புகார் பதிவு செய்யப்பட்டது. "இது நில மோசடி தொடர்பான பழைய வழக்கு” என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பாஸி தெரிவித்தார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பாக மனோஜ் குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளதாகவும், அப்போது இவரது கூட்டாளி வினோத் என்பவர் பிளாட் வாங்குவதற்காக ரூ.6 லட்சம் தொகையை 2012-ம் ஆண்டு கொடுத்ததாகவும், தனக்கு அந்தத் தொகையை அவர் இன்னமும் திருப்பித் தரவில்லை என்றும் வினோத் புகார் செய்திருந்தார்.

இதனையடுத்து தற்போது மனோஜ் குமார் கைது செய்யப்பட்டார்.

ஆம் ஆத்மி சாடல்:

டெல்லி போலீஸ் துறையை அரசியல் ஆயுதமாக பாஜக பயன்படுத்தி இத்தகைய கைதுகளை மேற்கொள்கிறது, சவாலைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். வியாபம் முறைகேட்டில் ஏகப்பட்ட அகால மரணங்கள் நிகழ்ந்துள்ளன, ஆனால் இதுவரை கைதுகள் இல்லை ஆனால், ஆம் ஆத்மி கட்சியினரைக் கைது செய்வதில் போலீஸ் காட்டும் முனைப்பு ‘அபாரமாக’ உள்ளது என்று கடுமையாக சாடியுள்ளது.

“இந்த வழக்கு பிப்ரவரி 2014-ம் ஆண்டுக்கானது. அதன் பிறகு விசாரணை இல்லை, அழைப்பாணைகள் இல்லை, இது பழிவாங்கும் அரசியல் தவிர வேறு எதுவும் இல்லை. போலீஸ் துறை எங்களுக்கு எதிராக அரசியல் ஆயுதமாக்கப்பட்டு வருகிறது, சந்திக்கத் தயார்” என்று ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் தீபக் பாஜ்பாய் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT