ஆந்திராவில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கோதாவரி மகாபுஷ்கரம் விழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோதாவரி ஆற்றில் புனித நீராடி உள்ளதாக ஆதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை இரவு முதலே ஏராளமான பக்தர்கள் புஷ்கரம் நடக்கும் ராஜமுந்திரி, கொவ்வூரு, கம்மம் ஆகிய பகுதிகளில் குவியத் தொடங்கினர்.
நேற்று அதிகாலை 5 மணிக்கு புனித நீராடும் நிகழ்ச்சி தொடங்கியது முதல் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்தது.
இதன் காரணமாக தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்க ளிலும் கோதாவரி பகுதி மாவட்டங் களுக்கு செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொல்கத்தா-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்15 கி.மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் ஸ்தம்பித்தன.
இதேபோல ஹைதராபாத்தில் இருந்து வாரங்கல், கம்மம், நிஜாமாபாத் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் சாலைகளிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போதிய அரசு, தனியார் பஸ்கள் கிடைக்காமல் பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாயினர்.
மேலும் விசாகப்பட்டினத்தில் இருந்தும் கோதாவரி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் சரிவர கிடைக்காததால் பக்தர்கள் அவதிக்குள்ளாயினர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோதாவரி புஷ்கர சிறப்பு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, நெடுஞ்சாலைகளில் வாகனகட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டார்.
இதேபோல தெலங்கானா முதல்வரும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய மாற்று பாதைகளை உபயோகப்படுத்த வேண்டும் எனவும், 24 மணி நேரமும் ரோந்து போலீஸார் பணியில் இருக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
கோதாவரி புஷ்கரம் காரணமாக ஆந்திர மாநிலத்தில் வரும் திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்களிலும் அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் வரும் செவ்வாய்க்கிழமை வரை கோதாவரி புஷ்கரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.