உத்தரப்பிரதேசத்தில், லஞ்சம் கொடுக்க மறுத்ததால் செய்தியாளர் ஒருவரின் தாய் காவல் நிலையத்தில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார். அவர் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசா ரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்ளூர் இந்தி பத்திரிகையில் பணியாற்றும் நிருபரின் தந்தை ராம் நாரயண் என்பவரை கோதி காவல் நிலைய போலீஸார் விசா ரணைக்காக அழைத்துச் சென்றனர்.
காஹா கிராமத்தில் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறல் சம்பவத்தைத் தொடர்ந்து துப்பாக் கிச் சூடு நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க ராம் நாராயணனை காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
அவரை விடுவிக்கும்படி ராம் நாரயணின் மனைவி நிது கடந்த சனிக்கிழமை காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளார். அங்கு காவல் நிலைய பொறுப்பாளர் ராம் சாகேப் சிங் யாதவ், உதவி ஆய்வாளர் அகிலேஷ் ராய் ஆகியோர் அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் நிது தர மறுக்கவே அவரைத் தாக்கி பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொளுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உடனடியாக, நிது மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங் கிருந்து லக்னோவுக்கு பரிந்துரைக் கப்பட்டார். ஆனால் கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்ட நிது மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக, இரு காவல் துறை அதிகாரிகளையும் காவல் துறை கண்காணிப்பாளர் அப்துல் ஹமீது பணியிடை நீக்கம் செய்துள்ளார். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், காவல் துறை தரப்பில் நிது தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
முதல்வர் உறுதி
இதனிடையே இச்சம்பவத்தில் காவல் துறையினர் குற்றம் புரிந்தது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அகிலேஷ் யாதவ், “இச்சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிமேலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.
உத்தரப்பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்பு ஜகேந்திர சிங் என்ற நிருபர் காவலர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார். அமைச்சர் ராம் மூர்த்தி வர்மாவின் ஊழல்களை அம்பலப் படுத்தியதால் காவல் துறையினரால் அவர் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவல் துறை யினர் பெண்ணை தீ வைத்துக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது.