சென்சார் போர்டு என அழைக்கப்படும் மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் செயல்பாட்டை தலைமை கணக்குத் தணிக்கைத் துறை (சிஏஜி) கடுமையாக விமர்சித்துள்ளது.
2012ஆம் ஆண்டிலிருந்து 2015 வரை, பல்வேறு விதிமீறல் மூலம், வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கக் கூடிய ( A certificate) 172 ஏ சான்றிதழ் படங்களுக்கு யூஏ (UA) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், 166 யூஏ சான்றிதழ் படங்களுக்கு யூ (U) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாகப் பெறப்பட்டுள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், தணிக்கை சான்றிதழ் வழங்கும்போது போலி ஆவணங்கள் தயாரித்துள்ளதாகவும், நெருக்கமானவர்களுக்காக சலுகை அளித்துள்ளதாகவும் சென்சார் போர்டை சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது.
அக்டோபர் 1, 2013 முதல், மார்ச் 31 2015 வரையிலான மும்பையில் செயல்படும் தணிக்கைக் குழுவின் கணக்கை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ள சிஏஜி, அனைத்து தரவுகளையும் டிஜிட்டல் மயமாக்க தேவையான நிதியை பெற்றிருந்தாலும், தணிக்கைக் குழு, கோப்புகளை சரியாக பேணாமல் இருந்துள்ளது என்றும், முக்கியத் தகவல்களை ஆவணப்படுத்தாமல் இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது. 4.10 லட்சம் பதிவுகளும், 60 லட்சம் பக்கங்கள் மதிப்பிலான தகவல்களும் இன்னும் டிஜிட்டல் மயமாக்கப்படவில்லை.
சான்றிதழ் வழங்குவதற்கான கட்டணம் 6 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை, வரிக் கட்டணம் 12 ஆண்டுகளாக திருத்தப்படவில்லை. 2011-லிருந்து 2013 வரை ரூ.14 கோடியை தணிக்கை சான்றிதழ் வழங்கக் கட்டணமாக பெற்ற தணிக்கைக் குழு, ரூ.5.5 கோடியை மட்டுமே வரியாக பெற்றுள்ளது.
கேப்ரியல் மற்றும் த்ரீ கான் ப்ளே தட் கேம் என்ற இரண்டு படங்களைப் பார்த்து தணிக்கை வழங்கியது மஹாமுனி மற்றும் மானே ஆகியோர். இந்தப் படங்கள் மறு ஆய்வுக்காக சமர்ப்பிக்கப்படவில்லையென்றாலும், கொடுக்கப்பட்ட சான்றிதழில் படத்தைப் பார்த்தது வி.கே.சவாக் (தணிக்கைக் குழு தலைவரின் செயலாளர்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்களைப் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்ற துர்வே என்பவர், இதை "சென்சார் கேட்" என்று அழைத்துள்ளார். இது குறித்து பேச சென்சார் போர்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஷ்ராவன் குமாரை தொடர்பு கொண்டபோது, அவர் பெங்களூருவில் இருந்ததால் அவரால் பேச முடியவில்லை.
அதேவேளையில், இது குறித்து பேசியுள்ள தலைவர் பஹ்லஜ் நிஹ்லானி, "எனக்கு இந்த அறிக்கை கிடைக்கவில்லை. இவை நீண்ட நாட்களுக்கு முன் நடந்தவை. அப்போது நான் பொறுப்பில் இல்லை. ஆனால் கண்டிப்பாக இத்தகைய முறைகேடுகள் இனி நடக்காமல் தடுக்க வேண்டிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
பெயர் குறிப்பிட விரும்பாத சென்சார் போர்ட் அதிகாரி ஒருவர் பேசுகையில், "இது வெறும் ஆய்வறிக்கை மட்டுமே. எங்களது பதிலை சிஏஜி-க்கு தாக்கல் செய்யும் போது அனைத்தும் தெளிவாகும்" என்றார்.
சென்சார் துறை சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து போராடிவரும் ஆர்வலர் டீனா சர்மா டெல்லி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் நாங்கள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு செவி சாய்ப்பதில்லை, அதுவரை இத்தகைய அறிக்கைகள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கும் என டீனா கூறியுள்ளார்.
சமீப காலமாக சென்சார் போர்ட் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. சென்சார் உயர் அதிகாரிகள் சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக முன்னமே குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ரூ.70,000 லஞ்சம் கேட்டதால் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ராகேஷ் குமாரை சிபிஐ கைது செய்தது.
அவருக்கு முன்னர் தலைமை பொறுப்பில் இருந்த பங்கஜா தாக்கூரும், நெருங்கிய சொந்தம் ஒருவர் இயக்கிய படத்துக்கு விதிமுறைகளை மீறி தணிக்கை சான்றிதழ் வழங்கியதாக சர்ச்சைகளில் சிக்கினார்.