வறுமைக்கு எதிரான போர் என்ற மத்திய அரசின் செயல் திட்டத்தின் ஓர் அங்கமான செயல்திறன்மிக்க இந்தியா திட்டத்தை டெல்லியில் மோடி நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியது: நமது இளைஞர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதன் மூலம் 4 முதல் 5 கோடி பேரை தொழில் துறையின் பல்வேறு பிரிவுகளில் திறன்மிகு பணியாளர்களாக உருவாக்க முடியும்.
இதற்காக நாம் தொலை நோக்குப் பார்வையுடன் அடுத்த 10 ஆண்டுகளுக்கான திட்டத்தை உருவாக்க வேண்டும். தொழில் துறையினருக்கும், தொழில்நுட்பத் திறன்மிக்கவர்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆலோசனை நடத்த வேண்டும். சீனா உலகின் உற்பத்தி கேந்திரமாக இருப்பதுபோல, இந்தியா மனித வளத்தின் தலைமையகமாக உருவெடுக்கும். இதுவே நமது இலக்கு. அதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள ஐஐடிக்கள் (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள்) சர்வதேச அளவில் பெயர் எடுத்ததுபோல இந்தியாவில் உள்ள ஐடிஐக்களும் (தொழிற்பயிற்சி கல்வி நிறுவனங்கள்) பெயரெடுக்க வேண்டும் என்றார்.
மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.