பிரதமர் நரேந்திர மோடி - பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்தித்துக் கொண்டது வெறும் கண் துடைப்பு முயற்சி என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
அண்மையில் ரஷ்யா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, உஃபா நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா, "பிரதமர் நரேந்திர மோடி - பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்தித்துக் கொண்டது வெறும் கண் துடைப்பு முயற்சி.
அந்த சந்திப்புக்குப் பின்னர் ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின் முக்கியத்துவம் என்னவென்று தெரியவில்லை.
பாகிஸ்தானில், அடுத்த ஆண்டு நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள மோடி ஒப்புதல் தெரிவித்துள்ளார். இத்தகைய பெரிய முடிவை அவர் எடுக்க எது உந்துததலாக இருந்தது என்பது புரியவில்லை.
மும்பை தாக்குதல் வழக்கு விசாரணையை துரிதப்படுத்துமாறு கூறினால், பாகிஸ்தானோ ஆதாரம் போதவில்லை எனக் கூறுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவிலான ஆலோசனை விரைவில் நடைபெறும் என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தானோ, காஷ்மீர் பிரச்சினை இடம்பெறவில்லை என்றால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்கிறது.
இவ்வாறாக இந்தியாவின் முயற்சியை வேறு விதமாக திரித்துப் பேசி உலக அரங்கில் நம்மை அவமானப்படுத்தப் பார்க்கிறது பாகிஸ்தான்" எனக் கூறியுள்ளார்.