தோல்பூர் அரண்மனை அரசுக்குச் சொந்தமானது, அதை முதல்வர் வசுந்தரா ராஜே அபகரித்துள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக புதிய ஆவணங்களை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது.
அந்த கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
ராஜஸ்தான் மாநிலம், தோல்பூர் அரண்மனை முதல்வர் வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் சிங்குக்கு சொந்தமானது என்று பாஜக கூறுவதை ஏற்க முடியாது. தோல்பூர் சமஸ்தானத்தின் சொத்துகள் இந்தியாவிடம் இணைக்கப்பட்டபோது அந்த அரண்மனையும் அரசுடன் இணைக்கப்பட்டது.
கடந்த 1949-ம் ஆண்டு ஆவணப்படி தோல்பூர் அரண் மனை அரசின் சொத்தாகும். ஆனால் அப்போதைய மகாராஜா உதய்பான் சிங் அவரது ஆயுள்வரை அந்த சொத்தை அனுபவிக்கலாம். இதுதொடர்பான ஆவணங்களை இப்போது வெளியிட்டுள்ளோம்.
அரண்மனைக்கு அருகே இருந்த 500 மீட்டர் நிலத்துக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இருந்து துஷ்யந்த் சிங் ரூ. 2 கோடியை இழப்பீடாக பெற்றுள்ளார்.
இதுவும் ஊழல்தான். இதை விசாரிக்க வேண்டும். துஷ்யந்துக்கு இந்த இழப்பீடு கொடுக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ வழக்கு தொடுத்துள்ளது.
வசுந்தராவை பதவி நீக்கம் செய்ய பாஜக தவறினால் அதுவரை அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள், விவரங்களை காங்கிரஸ் தொடர்ந்து வெளியிடும்.
லலித் மோடி, தனியார் நிறுவனம் ஆகியவற்றுடன் கூட்டுசேர்ந்து தோல்பூர் அரண்மனையை சட்டத்துக்கு புறம்பாக வசுந்தரா ஆக்கிரமித்துள்ளார்.
லலித் மோடி, வசுந்தரா குடும்பத்தினர் இணைந்து கூட்டாக வைத்துள்ள நிறுவனத்தில் சட்டவிரோதமாக முதலீடு செய்ய மொரீஷியஸ் நாட்டை லலித் மோடி பயன்படுத்தியுள்ளார்.
லலித் மோடி பிரிட்டனிடம் இருந்து பயண ஆவணங்கள் பெற வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரத்தை காங்கிரஸ் மறந்துவிடவில்லை.
இதுபற்றியும் பல தகவல்களை வெளியிடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.