குஜராத் பள்ளிப் பாடப்புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு குறித்த பாடத்தைச் சேர்க்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
2015ஆம் ஆண்டு கல்வித் திட்டத்தில் மோடி வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளது. ஆரம்ப நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இனி மோடி வாழ்க்கை வரலாறு கற்பிக்கப்படும்.
இது குறித்து குஜராத் மாநில கல்வி அமைச்சர் புபேந்திர சிங் சுதாசமா செய்தியாளர்களிடம் கூறுகையில், "மோடியின் பிறப்பு, அவரது குடும்பப் பின்னணி, அவரது பள்ளி நாட்கள், வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் அவர் எதிர்கொண்ட போராட்டங்கள் முதல் பிரதமர் ஆக உயர்வடைந்தது வரை அந்த பாடப் புத்தகத்தில் அறிமுகம் செய்யப்படும்” என்றார்.
5வது, 6வது மற்றும் 7ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்களில் மோடியின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்படும் என்று தெரிகிறது. நரேந்திர மோடியின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகளில் எதை எதை பாடத்திட்டத்தில் சேர்ப்பது என்பதைத் தீர்மானிக்கத் தனிக்குழு அமைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மாணவர்கள் மத்தியில் தலைமை வகிக்கும் திறமைகளையும் பண்பாட்டையும் மேம்படுத்தும் திட்டத்துடன் இது செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குஜராத் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஷ் தோஷி கூறுகையில், "மோடியை பரவசப்படுத்துவது எப்படி என்பதை யோசிப்பதை விட ஏழைக்குழந்தைகளுக்கு அனைத்துப் பாடப் புத்தகங்களும் கிடைக்க வழிவகை செய்வதே பொறுப்பான செயல்” என்று கூறியுள்ளார்.