சலீம் அகமது

 
இந்தியா

“கர்நாடக அமைச்சரவையில் 50% புதுமுகங்களுக்கு வாய்ப்பு” - காங். கொறடா தகவல்

வேட்டையன்

புதுடெல்லி: கர்நாடக மாநிலத்தில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் 50 சதவீதம் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கொறடா சலீம் அகமது தெரிவித்துள்ளார்.

கர்​நாட​கா​வில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்​டப்​பேரவைத் தேர்​தலில் காங்​கிரஸ் கட்சி வென்​றதை தொடர்ந்து முதல்​வர் பதவிக்கு கடும் போட்டி ஏற்​பட்​டது. மூத்த தலை​வர்​களான‌ சித்​த​ராமை​யா, டி.கே.சிவகு​மார், ஜி.பரமேஷ்வர் ஆகிய மூவருக்​கும் இடையே போட்டி நிலவியது. நீண்ட இழுபறிக்கு பின்​னர் சித்தராமையாவுக்கு முதல்​வர் பதவியும், டி.கே.சிவகு​மாருக்கு துணை முதல்​வர் பதவி​யும் வழங்கப்​பட்​டது.

அப்​போது இரு​வருக்​கும் தலா இரண்​டரை ஆண்டு​கள் முதல்​வர் பதவி வழங்க காங்​கிரஸ் மேலிடத் தலைவர்கள் சம்​மதம் தெரி​வித்​த​தாக கூறப்​படு​கிறது.

சித்​த​ராமையா முதல்​வ​ராக பொறுப்​பேற்று 3 ஆண்​டு​கள் ஆன நிலை​யில், டி.கே.சிவகு​மாருக்கு முதல்​வர் பதவியை வழங்க வேண்​டும் என அவரது ஆதர​வாளர்​கள் போர்க்​கொடி தூக்​கினர். இதையடுத்து காங்​கிரஸ் தேசி​யத் தலைவர் மல்​லி​கார்​ஜுன கார்கே தலை​மை​யில் முதல்வர் மாற்ற விவ​காரம் தொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது.

இதில் சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டுமென மேலிட தலைவர்கள் தெரிவித்தனர். அதன்படி அவர் தனது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். விரைவில் டி.கே.சிவக்குமார் தலைமையில் காங்கிரஸ் அமைச்சரவை அமையவுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக சட்டப்பேரவை கொறடா சலீம் அகமது கூறியது: “நாளை காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். புதிய அமைச்சர்கள் யார், எத்தனை பேருக்கு அமைச்சரவையில் இடம், அமைச்சராக பொறுப்பேற்கும் சட்டப்பேரவை உறுப்பினரின் சாதி, மதம் உள்ளிட்டவையும் பரிசீலிக்கப்படும்.

அதோடு முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றவர்களில் எத்தனை பேருக்கு வாய்ப்பு, புதுமுகங்கள் யார், யார் உள்ளிட்டவை குறித்து விவாதிப்போம். இது கட்சியின் கூட்டு முடிவாக இருக்கும். அதன் மீதான இறுதி முடிவை கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் முடிவு செய்வார்கள்.

நாங்கள் ஏற்கெனவே சொன்னது போல புதிய அமைச்சரவையில் சுமார் 50 சதவீதம் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். 2028 பேரவை தேர்தலுக்கு நாங்கள் தயாராகி வேண்டி உள்ளது. அதை கருத்தில் கொண்டு காமராஜர் திட்ட மாடலை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT