ஜெய்ப்பூர்: 2025-ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஜெய்ப்பூர் நகரிலுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெற்றி பெற்றுள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இவர்கள்தான் இந்த ஆண்டு நீட் வினாத்தாளை கசிய விட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வு அவசியம். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த மே 3-ம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீட் மறுத்தேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மறுதேர்வுக்கான புதிய ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதில் கேரளா, மகாராஷ்டிர மருத்துவ மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், விசாரணைக்காகச் சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, நீட் வினாத்தாள் கசிவு வழக்கின் பின்னணி ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருக்கின்றன. ராஜஸ்தானின் ஜம்வா ராம்கரைச் சேர்ந்த சகோதரர்களான மங்கிலால் மற்றும் தினேஷ் பிவால் ஆகியோர், இந்த ஆண்டுக்கான நீட்-யுஜி வினாத் தாளை குருகிராம் மருத்துவர் ஒருவரிடமிருந்து கடந்த ஏப்ரல் 26ம் தேதி ரூ.30 லட்சத்துக்கு வாங்கியது தெரியவந்துள்ளது. இவர்களில் ஒருவர், சிகார் பகுதியில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த தனது மகனுக்கு அந்த வினாத்தாளைக் கொடுத்துள்ளார்.
பின்னர் ஏப்ரல் 29-ம் தேதி அவர்கள் அந்தத் தாளை பலருக்கு விற்றுள்ளனர். ஜெய்ப்பூர் அருகே உள்ள ‘சிகார்' பகுதி, இந்த வினாத்தாள் கசிவு மோசடியின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. சிகாரில் உள்ள எம்பிபிஎஸ் ஆலோசனை ஏஜென்ட் ராகேஷ் குமார் மண்டவாரியா என்பவர் அந்தத் தாளை வாங்கி, கேரளாவில் எம்பிபிஎஸ் பயிலும் சிகார் மாணவர் ஒருவருக்கு ரூ.30,000-க்கு விற்றுள்ளார். மேலும், அந்த மாணவர் தேர்வுக்கு முந்தைய நாள் தனது தந்தைக்கு (சிகாரில் விடுதி நடத்துபவர்) அந்தத் தாளை அனுப்பியுள்ளார். அவர் தனது விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு அதனைப் பகிர்ந்துள்ளார். இந்த வழக்கின் முக்கிய நபராக குருகிராம் மருத்துவர் கருதப்படுகிறார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான தினேஷ் பிவாலுக்கு ஓர் அரசியல் கட்சியுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 2025-ம் ஆண்டில் ராஜஸ்தானின் மங்கிலால் மற்றும் தினேஷ் பிவால் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள தகவலும் அம்பலமாகியுள்ளது. மேலும் இவர்கள் 5 பேரும் பிரபலமான மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் ஒரு தகவலை தினேஷ் பிவால் பதிவு செய்துள்ளார். அதில் ‘‘எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர், அரசு மருத்துவக் கல்லூரியில் (எம்பிபிஎஸ்) பயிலத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, எங்கள் குடும்பத்துக்குப் பெருமைக்குரிய ஒரு விஷயமாகும். அந்த பிள்ளைகள் அனைவருக்கும் ஒரு பொன்னான எதிர்காலம் அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்’’ என்று தினேஷ் பிவால் பதிவு செய்துள்ளார்.
ஓராண்டு கழிந்துள்ள நிலையில் தற்போது வினாத்தாள் கசிவு வழக்கில் தினேஷ் பிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மங்கிலால், மங்கிலாலின் மகன் விகாஸ் ஆகியோரும் போலீஸின் பிடியில் சிக்கியுள்ளனர். மங்கிலால் மகன் விகாஸ், நீட் தேர்வில் 85.11 சதவீத மதிப்பெண் பெற்று சவாய் மாதோப்பூர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அவர் 2024 நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு வெறும் 270 மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்தார்.
அதேபோல் மங்கிலாலின் மகள் பிரகதி, டவுசா மருத்துவக் கல்லூரியில் 2025-ல் சேர்ந்துள்ளார். நீட் தேர்வில் அவர் 89.08 சதவீத மதிப்பெண் பெற்றார். ஆனால் இவர் 2024 நீட் தேர்வில் 332 மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்தார். 2024 நீட் தேர்வில் தினேஷ் பிவாலின் மகள் கன்ஜன் 355 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற நிலையில், 2025 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வாராணசியிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளார்.
பிவால் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு சகோதரரான கன்ஷியாமின் மகள் சானியா, 2025 நீட் தேர்வில் 94.07 சதவீத மதிப்பெண் பெற்று மும்பை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். கன்ஷியாமின் மற்றொரு மகள் பாலக், 2025 நீட் தேர்வில் 98.61 சதவீத மதிப்பெண் பெற்று ஜெய்ப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இவர் 2024 நீட் தேர்வில் 512 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
இவர்கள் 5 பேருமே முந்தைய நீட் தேர்வில் குறைந்த அளவு மதிப்பெண்கள் மட்டுமே எடுத்த நிலையில் 2025 நீட் தேர்வில் அதிக அளவில் மதிப்பெண்களைக் குவித்து அனைவருமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். தினேஷ் பிவால், மங்கிலால் ஆகியோர் கைதாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டும் நீட் வினாத்தாள் கசிந்திருக்குமா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் கடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ புகாரும் வரவில்லை. இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள நாசிக்கைச் சேர்ந்த ஷுபம் கைர்னார், புனேவைச் சேர்ந்த யாஷ் யாதவ் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதில் யாஷ் யாதவ்தான், நீட் வினாத்தாளை பிவால், மங்கிலால் குடும்பத்தாருக்கு கொடுத்தது தெரியவந்துள்ளது.