இந்தியா

நீட் வினாத்தாள் மீண்டும் கசியாமல் இருக்க தேர்வு மையங்களில் 5 லட்​சம் வீரர்கள் பாதுகாப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜூன் 21-ம் தேதி நீட் மறு​தேர்வை எந்​தப் புகாரும் இல்​லாமல் நடத்த தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) தயா​ராகி வருகிறது. வினாத்​தாள் கசிவதைத் தடுக்​க​வும், நீட் தேர்வு செயல்முறை​யின் மீது மீண்​டும் நம்​பிக்​கையை ஏற்​படுத்​த​வும் இது​வரை இல்​லாத அளவில் பாது​காப்பு ஏற்​பாடு​களை என்​டிஏ அறி​முகப்​படுத்தி உள்​ளது.

குறிப்​பாக டெலிகி​ராம் செயலிக்கு தடை மற்​றும் வினாத்​தாள்களைக் கொண்டு செல்ல இந்​திய விமானப் படை சேவையைப் பயன்​படுத்​தப்​படு​வது உள்​ளிட்ட முக்​கிய நடவடிக்​கை​களின் விவரம் வரு​மாறு: கடந்த நீட் தேர்​வின் போது ஒரு கும்பல் டெலிகி​ராம் செயலியைப் பயன்​படுத்தி வினாத்​தாள்களைக் கசி​ய​விட்​டது விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது. மீண்​டும் அது​போல் ஒரு சம்​பவம் நிகழ்​வதைத் தடுக்க, ஜூன் 22ம் தேதி வரை இந்​தி​யா​வில் டெலிகி​ராம் செயலிக்கு மத்​திய அரசு தற்​காலிக​மாகத் தடை விதித்​துள்​ளது.

நீட் வினாத்​தாள் தயாரிப்​பில் ஈடு​பட்ட அனைத்​துப் பணியாளர்களும் ஜூன் 21-ம் தேதி வரை தனிமைப்​ படுத்தப்பட்டுள்​ளனர். அவர்​களை யாரும் தொடர்பு கொள்ள முடியாத​படி ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டு, கண்காணிப்பில் உள்​ளனர். அவர்​கள் செல்​போன், லேப்​டாப் மற்றும் தனிப்​பட்ட தகவல் தொடர்பு சாதனங்​களைப் பயன்படுத்த அனு​மதி இல்​லை. இணைய வசதி மற்​றும் வெளி உலகத் தொடர்​பு​கள் கடும் கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டு வரப்பட்டுள்​ளன.

நீட் வினாத்​தாள்​களைப் பாது​காப்​பாகக் கொண்டு செல்​வதற்​காக, முதல் முறை​யாக இந்​திய விமானப் படை (ஐஏஎப்) ஈடு​படுத்​தப்பட உள்​ளது. மத்​திய உள்​துறை அமைச்​சகத்​தின் ஜூன் 7 தேதி​யிட்ட உத்​தர​வின்​படி, வினாத்​தாள்​கள் அதன் உற்​பத்தி மையங்​களில் இருந்து புறப்​பட்​டது முதல் பயணம் முழு​வதும் மாநில போலீஸாரின் பாது​காப்​புடன் கொண்டு செல்​லப்​படும்.

மேலும், ஹைத​ரா​பாத் மற்​றும் அகம​தா​பாத் ஆகிய முதன்மை மையங்​களில் இருந்து தேர்வு நடத்​தப்​படும் 551 நகரங்​களின் மையங்​கள் வரையி​லான ஒட்​டுமொத்த பயணத்​தி​லும் சிஐஎஸ்​எஃப் மற்​றும் சிஆர்​பிஎஃப் வீரர்​கள் தீவிர​மாகப் பாது​காப்​பார்​கள். இவ்​விரு படைகளும் தங்​களின் சிறப்​புப் பிரிவு வீரர்​களை இதற்காக வழங்​கி​யுள்​ளன.

தேர்வு செயல்​முறை முழு​வதும் தொடர்ச்​சி​யான கண்​காணிப்பை உறுதி செய்ய, என்​டிஏ பல அடுக்கு பாது​காப்பு உள்​கட்​டமைப்பை உரு​வாக்​கி​யுள்​ளது. தேர்வு மையங்​கள் முழு​வதும் 5 லட்​சத்​துக்​கும் அதி​க​மான பாது​காப்​புப் பணி​யாளர்​கள் பணி​யமர்த்​தப்​பட்டு வருகின்​றனர்.

தேர்வு மையங்​களில் பயோமெட்​ரிக் வரு​கைப் பதிவு முறை​கள், முக அங்​கீ​காரம் மற்​றும் பயோமெட்​ரிக் சரிபார்ப்பு போன்ற மேம்பட்ட தொழில்​நுட்​பங்​கள் பொருத்​தப்​பட்டு வரு​கின்​றன. இந்தச் செயல்​ முறையோடு உடனுக்​குடன் நேரலை​யாகக் கண்காணிக்​கும் சிசிடிவி கண்​காணிப்பு வசதி​யும் ஒருங்கிணைக்கப்​படு​கிறது.

தேர்​வர்​களின் அடை​யாளச் சோதனை​கள், ஆவண சரி​பார்ப்பு மற்றும் சோதனை​யிடும் நடை​முறை​கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஹால் டிக்​கெட்​டு​கள் மற்​றும் அடையாள ஆவணங்​களை மிக உன்​னிப்​பாகச் சரி​பார்க்​கு​மாறு அதி​காரி​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

வினாத்​தாள் கசிந்​து​விட்​ட​தாகக் கூறப்​படும் வதந்​தி​களை மாணவர்​கள் நம்ப வேண்​டாம் என்று என்​டிஏ மீண்​டும் மீண்​டும் எச்​சரித்​துள்​ளதுடன், தேர்​வுக்கு முன்​பாக யாரும் வினாத்தாளைப் பெற முடி​யாது என்​றும் திட்​ட​வட்​ட​மாகக் கூறி​யுள்​ளது. தவறான தகவல்​களைப் பரப்​புபவர்​கள் அல்​லது மோசடி செய்ய முயற்​சிப்​பவர்​கள் மீது சட்​டப்​படி கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் எனவும் எச்​சரிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT