ஐதராபாத்: தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டம், சங்கர்பள்ளி மண்டலத்தில் அமைந்துள்ள என்சிசி பணிமனையில் நேற்று (ஏப்.27) கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 11 பேர் காயமடைந்தனர்.
ரங்காரெட்டி மாவட்டத்தில் செவெல்லா எல்லைக்குட்பட்ட மகாலிங்கபுரம் கிராமத்தில் உள்ள என்சிசி பணிமனையில், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துகொண்டிருந்த வேளையில், மழையிலிருந்து தப்புவதற்காக கிரேனுக்கு அருகிலேயே அமைந்திருந்த ஒரு கொட்டகைக்குள் மொத்தம் 16 தொழிலாளர்கள் தங்கியிருந்தனர்.
அப்போது கிரேன் திடீரெனச் சரிந்து, அந்தக் கொட்டகையின் மீது விழுந்தது. இதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 11 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்துக் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து செவெல்லா காவல் துணை ஆணையர் யோகேஷ் கௌதம் அளித்த தகவலின்படி, 5 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்; எஞ்சிய 11 பேரும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், சிலர் சுயநினைவின்றி (கோமா நிலையில்) இருப்பதாகவும் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்கள் அலி ஹுசைன், நாகேந்திர சிங், சஜீம், முகேஷ் குமார் மற்றும் சோனு ராஜீபி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் துணை ஆணையர் யோகேஷ் கௌதம் தெரிவித்தார்.