இந்தியா

இந்துத்துவா கொள்கைகளை அமல்படுத்த பாஜக தேசிய செயற்குழுவை கூட்ட வேண்டும்: பிரதமர் மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

பிடிஐ

இந்துத்துவா கொள்கைகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்க பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கோரியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது பாஜகவின் பொறுப்பு. இதேபோல் பல்வேறு இந்துத்துவா கொள்கைகளை அமல்படுத்த கட்சி உறுதியளித்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என்று கோரி கட்சித் தலைவர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதினேன். நான்கு மாதங்களாகியும் அவர் பதில் அளிக்கவில்லை. எனவே தேசிய செயற்குழுவைக் கூட்ட நீங்கள் (பிரதமர் நரேந்திர மோடி) நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலீஜியம் முறைக்கு மாற்றாக தேசிய நீதிபதிகள் ஆணைய சட்டத்தை கொண்டு வந்திருப்பதால் உச்ச நீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ விவகாரத்தில் மத்திய அரசின் கருத்தை புறக்கணித்து அந்த சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இந்த விவகாரங்களில் மத்திய சட்ட அமைச்சக அதிகாரிகள் சரியான புரிதலோடு செயல்படவில்லை. இவ்வாறு அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT