நாட்டில் முஸ்லிம் மக்கள்தொகை உயர்ந்துக் கொண்டே செல்கிறது. இதனால் ஏற்படும் ஏற்றத்தாழ்வை தடுக்க குடும்ப கட்டுப்பாட்டை அரசு கட்டாயமாக்க வேண்டும் என்று பிரதமருக்கு சிவசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில், "முஸ்லிம் மக்கள்தொகைக்கு இணையாக இந்து மக்கள்தொகையை பெருக்குவதால் மட்டுமே பிரச்சினை தீர்ந்துவிடாது. குடும்பக் கட்டுப்பாடு மட்டுமே இதற்கு ஒரே தீர்வு.
இதனை மத்திய அரசிடம் சங் பரிவார் வலியுறுத்த வேண்டும். கடந்த 2001 முதல் 2011 வரையில் முஸ்லிம் மக்கள்தொகை 24 சதவீதம் உயர்ந்துள்ளது. 2015 வரையில் இது நிச்சயம் 5 முதல் 10 சதவீதத்துக்கு மேலும் உயர்ந்திருக்கும்.
இதனால் நாட்டு மக்களிடையே மொழி, புவியியல் பிரச்சினையும் வேற்றுமையும் உருவாகும். பின்னர் அனைத்து தரப்பு மக்களும் பிளவுபடுவார்கள்.
இதனை முக்கியமாக முஸ்லிம் மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். கட்டாய குடும்பக் கட்டுப்பாடு முறையை முஸ்லிம் மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதை அவர் நிச்சயப்படுத்த வேண்டும். நடு இரவிலும் பிரச்சினை என்று கதவை மக்கள் தட்டினால், அதற்கு தீர்வு காணப்படும் என்று பிரதமர் கூறினார். இதுவும் அப்படியான முக்கியப் பிரச்சினை தான்.
லோக்பால் மசோதாவை விட பொது சிவில் சட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. கர் வாப்சியில் ஈடுபடுவோரை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் அது மட்டுமே இந்து மக்களுக்கான தீர்வு இல்லை. முஸ்லிம் அடிப்படைச் சட்டத்தைக் கொண்டு ஆட்சி நடத்தப்படும் இராக்கில், பொதுமக்களுக்கான கண்ணியம் காக்கப்படவில்லை.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒவ்வொரு முஸ்லிம் வீட்டின் கதவுகளையும் தட்டி இந்த எதார்த்தத்தை எடுத்துக் கூர வேண்டும்" என்று அதில் குறிப்பிடப்பட்டது.