கறுப்புப் பண விவகாரத்தைக் கண்டுபிடித்து விசாரிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் சிறப்பு விசாரணைக்குழுவை மோடி அரசு அமைத்துள்ளது.
பிரதமர் பொறுப்பேற்ற பிறகு இந்த முக்கியமான நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தச் சிறப்பு விசாரணைக் குழுவில் வருவாய்த் துறைச் செயலர், சி.பி.ஐ மற்றும் ஐ.பி. இயக்குனர்கள், அமலாக்கப்பிரிவு அதிகாரி, மத்திய நேரடி வரித் துறைத் தலைவர், மத்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஆகியோர் உள்ளனர்.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிஜித் பசாயத் இந்தக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிய பிறகே சிறப்பு விசாரணைக் குழு அமைக்கபட்டுள்ளதாக சட்டம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.