இந்தியா

பாலியல் பலாத்கார வழக்கில் சமரசத் தீர்வுக்கு இடமில்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

பாலியல் பலாத்கார வழக்கை சமரச மையத்துக்கு பரிதுரைப்பது, பலாத்காரம் செய்த நபரையே பாதிக்கப்பட்ட பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பது தவறு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பலாத்கார வழக்கு ஒன்றில் மத்தியப் பிரதேச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், மத்தியப் பிரதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பெண்களின் கண்ணியத்துக்கு எதிரானது எனவும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாலியல் பலாத்கார வழக்குகளை சமரச மையத்துக்கு பரிந்துரைப்பது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கையாள்வதில் மென்மையான போக்கை கடைபிடிப்பதாகும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம் செய்த நபருடன் பெண் ஒருவருக்கு திருமணத்தை பரிந்துரைத்து வழக்கை சமரசம் செய்வதாக மத்தியப் பிரதேச நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பாலியல் வழக்கில் சமரசம் பெண்ணின் கண்ணியத்துக்கு எதிரானது. மத்தியப் பிரதேச நீதிமன்ற தீர்ப்பு உணர்வற்றதாக இருக்கிறது. அந்த தீர்ப்பில் மிகப்பெரிய பிழை உள்ளது.

திருமணம் என்ற பெயரில் சமரசம் செய்வதால் ஒரு பலாத்கார குற்றவாளி தங்கு தடையின்றி சுதந்திரமாக நடமாட நீதிமன்றம் வழிவகை செய்துள்ளது. பாலியல் பலாத்கார வழக்குகளை சமரச மையத்துக்கு பரிந்துரைப்பது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கையாள்வதில் மென்மையான போக்கை கடைபிடிப்பதாகும்" எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், மத்தியப் பிரதேச நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதோடு, வழக்கை மறுவிசாரணை செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

முக்கியத்துவம் பெறும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு:

அண்மையில், சிறுமி பலாத்கார வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ், "வழக்குகளில்கூட சமரசம் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெண் குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இவ்வழக்கில் சமரச தீர்வு காண முயற்சிக்கலாம்.

அதற்கு குற்றவாளி சிறையில் இருந்தால் சரியாக இருக்காது. எனவே, குற்றவாளி மோகனுக்கு இடைக்கால ஜாமீன் அளிக்கப்படுகிறது. சமரச மையத்தின் முடிவை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

பாலியல் வழக்கை சமரச மையத்துக்கு பரிந்துரைத்தற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT