இந்தியா

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது.

இவ்வழக்கு தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதிகள் அருண் குமார் மிஸ்ரா, அமிதவா ராய் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "இந்த கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும் இந்த விவகாரத்தில் உடனடியாக உத்தரவிட முடியாது" எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

மனு விவரம்:

வழக்கறிஞர் ஏ.எம்.கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம், குஜராத், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்துக்கு வருவது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது.

மேலும் உச்ச நீதிமன்றத்தில் நாளுக்கு நாள் பணிச்சுமை அதிகரித்து வருகிறது. பெரும் எண்ணிக்கையிலான வழக்குகள் நிலுவையில் தேங்கியுள்ளன. எனவே நாடு முழுவதும் உச்ச நீதிமன்றத்தின் சேவையை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

எனவே தெற்கு, மேற்கு, வடகிழக்கு மாநிலங்களின் நலனுக்காக அந்தப் பிராந்தியங்களில் தலா ஓர் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும். இதன்படி தென்மாநிலங்களின் நலனுக்காக சென்னையில் உச்ச நீதிமன்ற கிளையை ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT