இந்தியா

நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு அதிகரிக்கும் சிக்கல்கள்

பிடிஐ

நிலம் கையகப்படுத்தும் மசோதா நாடாளுமன்ற இணைக்குழுவின் பரிசீலனையில் உள்ள நிலையில் பாஜக ஆதரவு கட்சிகளே மசோதாவின் சில பிரிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சிவசேனா, சிரோமணி அகாலிதள், ஸ்வாபிமானி பக்சா ஆகியவை மசோதாவின் பல பிரிவுகளுக்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற இணைக்குழு தனது ஆய்வை முடிக்கும் தறுவாயில் உள்ளது, இந்நிலையில் இந்த மசோதாவின் பிரிவுகளை அக்குவேறு ஆணிவேறாக அடுத்தவாரத்தில் ஆய்வு செய்யவுள்ளது.

மசோதாவில் விவசாயிகளின் 70% ஒப்புதல் தேவை என்று சிவசேனா சிலநாட்களாக தனது நிலைப்பாட்டில் உறுதி காண்பித்து வரும் நிலையில், எஸ்.எஸ்.அலுவாலியா தலைமையிலான நாடாளுமன்ற இணைக்குழுவுக்கு சிரோமணி அகாலி தள் மற்றும் ஸ்வாபிமானி பக்சா ஆகியவை விவசாயிகளின் ஒப்புதலின்றி ‘ஒரு அங்குலம் நிலம்’ கூட கையகப்படுத்தக் கூடாது என்று எழுதியுள்ளன.

நாடாளுமன்ற இணைக்குழுவுக்கான தங்களது எழுத்துபூர்வ பிரதிநிதித்துவத்தில், சிரோமணி அகாலி தள் கட்சியின் 5 எம்.பி.க்களான நரேஷ் குஜ்ரால், பல்விந்தர் சிங் புந்தர், சுக்தேவ் சிங் திண்ட்சா, பிரேம் சிங் சந்துமஜ்ரா, மற்றும் ஷெர் சிங் குபாயா ஆகியோர் தெரிவிக்கையில், நிலம் என்பது விவசாயிகளின் விலைமதிப்பற்ற சொத்து என்று தாங்கள் உறுதிபட நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

"விவசாயிகள்/நில உரிமையாளர்களின் ஒப்புதல் இன்றி ஒரு அங்குலம் நிலத்தைக் கூட அரசு கையகப்படுத்தக் கூடாது" என்று கூறியுள்ளனர்.

மேலும், பொதுத்துறை திட்டங்களுக்காக மட்டுமே நிலம் கையகப்படுத்த வேண்டும் என்றும் தனியார் நிறுவனங்களுக்காக அரசு நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என்று இந்த எம்.பி.க்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மேலும், விவசாயிகள் தங்கள் குறையை தீர்க்க நீதிமன்றத்தை அணுகும் உரிமையையும் மறுக்கக் கூடாது என்று இவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிரோமணி அகாலி தள் இன்னும் ஒரு படி மேலே போய், விவசாய நில உரிமையாளர்கள் மட்டுமல்லாது, நிலத்தை நம்பி வாழ்வாதாரம் கொண்டவர்கள் உட்பட, அதாவது நிலத்தில் கூலிவேலை செய்யும் விவசாயிகள் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

ஸ்வாபிமானி பக்சா, லோக்சபா எம்.பி. ராஜு ஷெட்டி தலைமையில் மேலும் பல உத்தரவாதங்களை வலியுறுத்தியுள்ளது. அதாவது, உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களுக்காக அரசு-தனியார் கூட்டுறவு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் போது, 70% விவசாயிகளின் ஒப்புதல் பெறப்படவேண்டும் என்றும் 5 மடங்கு இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

2013- நிலச்சட்டத்தின் படி 4 மடங்கு இழப்பீடு அளிக்கப்பட வேண்டும், இது தற்போதைய திருத்தத்தில் மாற்றப்படவில்லை.

சிவசேனாவுக்கு ராஜ்யசபாவில் 3 எம்.பி.க்களும், சிரோமணி அகாலிதளத்துக்கு ராஜ்யசபாவில் 3 எம்பிக்களும் உள்ளனர்.

ஸ்வாபிமானி பக்சா தனது கோரிக்கையில், நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு 5 ஆண்டுகளுக்கு பயன்படுத்தாமல் இருந்தால் அந்த நிலம் உரியோரிடத்தில் மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்தப் பிரிவு ஐக்கிய முற்போக்கு கூட்டணி மசோதாவில் இருந்தது, தற்போது இது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், எந்த நோக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்பதில் நோக்கத்தை மாற்றக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

“அப்படி நோக்கம் மாற்றப்படும் திட்டமிருந்தால், அரசு இதனை விவசாயிகளுக்குத் தெரிவித்து, அவர் அதற்கு கொடுத்த ஒப்புதலை திரும்பப் பெறவோ அல்லது கூடுதல் இழப்பீடோ (சந்தை மதிப்பில்) வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்று விளைச்சல் நிலங்களை கையகப்படுத்துவது பற்றி ஒரு நிபந்தனையை விதித்துள்ளது.

உயர் முன்னுரிமை திட்டங்கள் அல்லது ராணுவ தேவைகளுக்காக மட்டுமே விளைச்சல் நிலம் கையகப்படுத்தப் படவேண்டும் என்று பக்சா வலியுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT