இந்தியா

பிஹார் பயணத்தின்போது மோடியை குறிவைத்து மனிதகுண்டு தாக்குதல் நடத்தும் அபாயம்: உளவு அமைப்புகள் தகவல்

ஐஏஎன்எஸ்

பிஹார் பயணத்தின்போது பிரதமர் மோடியை குறிவைத்து மனித வெடி குண்டு தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீது நடத்தப்பட்டது போன்று இப்போதும் தாக்குதல் நடத்தப்பட லாம் என்றும் உளவு அமைப்புகள் தகவல் கூறியுள்ளதாக பாட்னாவில் உள்ள காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி இன்று பிஹார் தலைநகர் பாட்னாவுக்கு வருகிறார். பிறகு முஸாபர்பூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற திட்டமிட்டுள்ளார். இந்த பயணத் துக்கு ஒரு நாள் முன்னதாக மனித குண்டு தாக்குதல் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோடி பயணத்தின்போது மிகுந்த கவனமாக இருக்கும்படி பிஹார் அரசையும் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகளையும் உளவு அமைப்பு கள் உஷார்படுத்தியுள்ளன என்று போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பெரும்புதூரில் 1991-ம் ஆண்டு விடுதலைப்புலி நடத்திய மனிதகுண்டு தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அதே பாணியில் நன்கு பயிற்சி பெற்ற பெண் மாவோயிஸ்ட்கள் மோடியை இலக்கு வைத்து தாக்கு தல் நடத்தக்கூடும் என்று உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்த வருபவர் பத்திரிகையாளர் அல்லது போலீஸ் அதிகாரி வேடத்தில் வரக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பாட்னாவில் இரு வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்றுவிட்டு 70 கிமீ தொலைவில் அமைந்துள்ள முஸாபர்பூருக்கு செல்லும் மோடி அங்கு பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். பிரதமருக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு கூடுதல் பாதுகாப்பு தரப்படும் என்று அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

மோடிக்கான பாதுகாப்பை சிறப்பு பாதுகாப்பு குழு மேற் கொண்டாலும் மாநில காவல் துறை யும் அவருக்கு போதிய பாதுகாப்பு தர மூத்த அதிகாரிகளுக்கு பிஹார் அரசு உத்தரவிட்டுள்ளது.

பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் 2013-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி மோடி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் நடைபெற இருந்த இடத்தில் குண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந் தனர். 100 பேர் காயம் அடைந்தனர். எனினும் அதனை பொருட்படுத்தாது மோடி அக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார் என்பது குறிப்பிடத் தக்கது.

SCROLL FOR NEXT