இந்தியா

வியாபம் முறைகேடு: தகவல்களை மறைத்ததாக ம.பி.முதல்வர் மீது குற்றச்சாட்டு

ஜதின் காந்தி

மத்திய பிரதேச சட்டப்பேரவையில் வியாபம் முறைகேடு தொடர்பாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கொடுத்த விவரங்கள் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களுக்கு முரணாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவரது முந்தைய ஆட்சியில் கேள்வி நேரத்தில் சவுகான் அளித்த பதில்கள் முரண்பாடானவை என்று தெரியவந்துள்ளது.

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழிடம் உள்ள ஆவணங்களின் படி, டிசம்பர் 2008 முதல் மார்ச் 2012 முதல் சவுகான் மருத்துவக் கல்வித் துறையை தன் வசம் வைத்திருந்தார் என்றும், அப்போதுதான் மருத்துவ முன் தேர்வுகளில் முறைகேடுகள் பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சவுகான் அளித்த பதில்கள் உண்மைக்குப் புறம்பானவையாக அமைந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

பிப்ரவரி 23, 2012-ம் ஆண்டு சவுகான் சட்டப்பேரவையில் கூறும்போது, மாணவர்களின் போலிக் கையெழுத்துகள் மற்றும் புகைப்படங்கள், ஐதராபாத் மற்றும் சண்டிகாரில் உள்ள மத்திய தடய அறிவியல் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்தேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் இந்த விவகாரத்தை அம்பலப்படுத்திய அஷிஷ் சதுர்வேதி ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற தகவல்களில், ஐதராபாத், சண்டிகர் சோதனைக்கூடங்கள் தங்கள் எந்த வித மாதிரிகளையும் பெறவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவையில் தவறான தகவல்களை சவுகான் அளித்ததாக எதிர்க்கட்ச்சித் தலைவர் குற்றச்சாட்டு:

2011-ம் ஆண்டு ம.பி. சட்டப்பேரவையில், 2007 மற்றும் 2010-ம் ஆண்டுகளுக்கு இடையில் எந்த ஒரு மோசடியான அட்மிஷனும் நடைபெறவில்லை என்றார்.

ஆனால் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சத்யதேவ் கதாரே தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு இது பற்றி கூறும் போது, “நவம்பர் 19, 2009-இல் எம்.பி. நகர் காவல் நிலையத்தில் 9 போலி மாணவர்களை அடையாளப்படுத்தி புகார் பதிவு செய்துள்ளது. 2010-ல் மேலும் 40 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால் 2011-ல் சட்டப்பேரவையை திசைதிருப்பியுள்ளார் சவுகான். அதுவும் இந்தத் துறை அவரது நேரடி தலைமையில் இருந்தது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. பிரதாப் கிரேவால் கேள்விக்கு அப்போது பதில் அளித்த சவுகான், போலி மாணவர்கள் ஒருவரும் அடையாளம் காணப்படவில்லை என்றார்.

ஆனால், ஜனவரி 2014-ல் 1,000 போலி அட்மிஷன்கள் நடைபெற்றுள்ளதாக ஒப்புக் கொண்டார் முதல்வர் சவுகான். ஆனால் அந்த எண்ணிக்கையை பெரிய அளவில் கடந்துள்ளது வியாபம் முறைகேடு என்று கூறுகிறார் சத்யதேவ் கதாரே.

ஆனால் பாஜக இதனையும் மறுத்து, காங்கிரஸ் பழைய விவகாரம் ஒன்றைக் கிளறுகிறது என்றும், சவுகானுக்கு எதிராக அரசியல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது என்றும் வழக்கமான பதிலை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT