இந்தியா

விவாதமற்ற அமளிதான் எதிர்க்கட்சிகளின் விருப்பம்: ஜேட்லி

பிடிஐ

லலித் மோடி - சுஷ்மா ஸ்வராஜ் சர்ச்சை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை; அவர்களுக்குத் தேவை அமளி, அவை முடக்கமே என மத்திய நிதி அமைச்சரும், மாநிலங்களவை பாஜக தலைவருமான அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

லலித் மோடி விசா விவகாரத்தில் உதவிய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை அவை கூடியவுடனேயே காங்கிரஸ் இப்பிரச்சினையை அவையில் எழுப்பியது. காங்கிரஸ் எம்.பி.ஹனுமந்த ராவ், சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக வலியுறுத்தும் பதாகையை உயர்த்தியபடி கோஷம் எழுப்பினார். இதனைத் தொடர்ந்து மற்ற உறுப்பினர்களும் கோஷம் எழுப்பினர்.

உறுப்பினர்கள் அமைதி காக்கும்படி அவையின் துணைத் தலைவர் வலியுறுத்தினார். ஆனால், தொடர்ந்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அடுத்தடுத்து இரண்டு முறை அவை ஒத்திவைக்கப்பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அரு ஜேட்லி, "லலித் மோடி - சுஷ்மா ஸ்வராஜ் சர்ச்சை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை; அவர்களுக்குத் தேவை அமளி, அவை முடக்கமே.

அரசு எந்த வகையான விவாதத்துக்கும் தயாராக இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சியினரோ கேள்வி நேரத்தை முடக்கிவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கூறுகின்றனர்.

இவ்விவகாரம் தொடர்பாக சுஷ்மா ஸ்வராஜ் அவையில் விளக்க அறிக்கை அளிப்பார் என்றுகூட நான் கூறினேன். அதையும் எதிர்க்கட்சிகள் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் நோக்கமும், விருப்பமும் அவை முடக்கமே" என்றார்.

SCROLL FOR NEXT