இந்தியா

கர்நாடக லோக் ஆயுக்தாவில் ஊழல் புகார்: நீதிபதி ராஜினாமா செய்ய கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்

இரா.வினோத்

கர்நாடக லோக் ஆயுக்தாவில் ஊழல் நடந்திருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதால் நீதிபதி பாஸ்கர் ராவ் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக, மஜத, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கறிஞர் சங்கங்களும் சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் குதித்திருப்பதால் லோக் ஆயுக்தா அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதியாக இருக்கும் பாஸ்கர் ராவின் மகன் அஸ்வின் ராவ், காவல் கண்காணிப்பாளர் சோனியா நரங் பெயரைச் சொல்லி ரூ.1 கோடி லஞ்சம் கேட்ட‌தாக புகார் எழுந்த‌து. இதேபோல அஸ்வின் ராவ் சில முக்கிய அதிகாரிகளின் துணையுடன் ரூ.100 கோடி வரை லஞ்சம் வாங்கி இருக்கலாம் என தகவல் வெளியானது. இதையடுத்து அஸ்வின் ராவ் மற்றும் 3 முக்கிய அதிகாரிகள் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

இதையடுத்து ஊழல் புகாரில் சிக்கியுள்ள நீதிபதி பாஸ்கர் ராவ் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக, மஜத, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெங்களூருவில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல கர்நாடக உயர் நீதிமன்ற வ‌ழக்கறிஞர்கள் சங்கம், பல்வேறு சமூக நல அமைப்பினரும் சிபிஐ விசாரணை கோரி லோக் ஆயுக்தா அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே முன்னாள் அமைச்சர் சுரேஷ் குமார் தலைமையில் பாஜகவினர், கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவை சந்தித்து மனு அளித்தனர். அதில், “நீதிபதி பாஸ்கர் ராவின் குடும்ப உறுப்பினர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க சுதந்திரமான அமைப்பை நியமிக்க வேண்டும்''என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ராஜினாமா செய்ய வேண்டும்

இதுதொடர்பாக முன்னாள் லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, ‘தி இந்து'விடம் கூறியதாவது:

ஊழலை ஒழிப்பதற்காக நாட்டிலே முதல் முறையாக 1984-ம் ஆண்டு கர்நாடகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு ஆரம்பிக்க‌ப்பட்டது. கடந்த காலங்களில் முதல்வர், அமைச்சர், அதிகாரிகள் உட்பட பல்வேறு முக்கிய நபர்கள் மீது பாரபட்சமின்றி, நடவடிக்கை எடுக்கப்பட்டதால் லோக் ஆயுக்தாவுக்கு நீதிமன்ற வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் நம்பிக்கை ஏற்பட்டுள்ள‌து.

இந்நிலையில் லோக் ஆயுக்தா நீதிபதி மீதோ, அவரது குடும்ப உறுப்பினர் மீதோ ஊழல் புகார் வந்தால், தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை நீதிபதி ராஜினாமா செய்ய வேண்டும். சில ஆண்டு களுக்கு முன்பு லோக் ஆயுக்தா நீதி பதியாக இருந்த சிவராஜ் பாட்டீல் மீது ஊழல் புகார் எழுந்ததால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல பாஸ்கர் ராவும் ராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT